பிராமணப் பெயர்கள் பெரும்பாலும் வடமொழிப் பெயர்களாக இருக்கின்றன என்ற கூற்றில் உண்மையிருக்கிறது. ஆனால் இன்று தமிழ்நாட்டில் தமிழ்ப் பெயர்களைப் பார்ப்பதே அரிதாக இருக்கும்போது பிராமணர்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. வைணவப் பிராமணர்கள் தமிழ்ப் பெயர்களைக் குழந்தைகளுக்கு வைக்கத் தயங்குவதில்லை அலர்மேல் மங்கை, ஆண்டாள், நப்பின்னை, குறுங்குடி, செல்வி போன்ற பல பெயர்கள் வைணவப் பெண் குழந்தைகளுக்கு வைக்கப் படுகின்றன. ஆனால் எனக்குத் தெரிந்து பொற்கொடி இல்லை. சுடர்க்கொடி இல்லை. ஏன் என்று தெரியவில்லை. தங்கப் பெண் உண்டு. ஆனால் செல்வப்பெண் இல்லை.
ஆண்டாள் இப்பாடலில் பொற்கொடி, புனமயில் செல்வப்பெண்டாட்டி என்று மூன்று விதமாக நாயகியை அழைக்கிறார். கண்ணன் ஊருக்கே ஒரு பிள்ளை போல இவள் ஊருக்கே ஒரு பெண்.
பாடலைப் பார்ப்போம்.
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம்ஒன் றில்லாத கோவலர்த்தம்
பொற்கொடியே புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.pa
‘கன்றுகள் போல இருக்கும் பசு மாடுகள்’ என்கிறார் ஆண்டாள். கண்ணன் இருக்கும் இடம் என்பதால் பசுக்கள் கூட இள்மை மாறாது இருக்கின்றன. வயது குறைந்து கொண்டே போகிறது. வைகுண்டத்தில் நித்ய்சூரிகள் வயது நூறு ஆகியும் பின்னால் குறையத் துவங்கி 25 ஆகுமாம். அவர்களுக்கு நேர்வது பரமனை நாள் தோறும் தொழுவதால் இங்கு பசுக்களுக்கு வயது குறைவது கண்ணனின் கை படுவதால் என்று வியாக்கியானம் சொல்கிறது. அவை அனைத்தும் – கிழப் பசுக்களானாலும்- வற்றாது பால் கொடுக்கின்றன. ‘முலை சரிந்தாரைப் பார்க்காத ராஜகுமாரனைப் போல கன்று மேய்க்கப்பெற்றால் பசுக்களைப் பாரான்’, என்று ஆறாயிரப்படி கூறுகிறது. இதை வியாக்கியானக்காரர்களின் ஆணாதிக்கக் கூற்று என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அவனை எண்ணுபவர்களின் எண்ணத்தில் தொய்வு ஏற்படக் கூடாது என்ற நோக்கில் இவ்வாறு கூறப்படுகிறது. அவனே பரிவு கொண்டு வயதானவர்களையும் இறை எண்ணத்தில் இளையவர்கள் ஆக்குவான்.
‘பல’ என்ற சொல்லுக்கு மிகவும் அருமையான விளக்கத்தை ஆறாயிரப்படி அளிக்கிறது. ‘பகவத் குணங்களும் எல்லையுண்டாகினும் இப்பசுக்களுக்கு எல்லையில்லை’. இதற்கு நாம் எண்ணற்ற உலகங்களும் எண்ணற்ற மனிதர்களும், உயிருள்ளவையும், உயிரற்றவையும் இருந்தாலும் இவை எல்லாவும் அவனுக்குப் ஆயர்குலத்துப்பசுக்கள் போன்றவை. எல்லாவற்றையும் கறப்பான். அருள்தருவான்.
ஆயர்களுக்கு யார் எதிரிகள்? கண்ணனின் எதிரிகளே அவர்களின் எதிரிகள். அவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று அவர்களோடு போர் புரிவார்கள். இதை மற்றொரு தளத்தில் பாகவதர்கள் பகவானை பழிப்பவர்களுடன் வாதப் போர்கள் செய்து அவர்களை வெல்வார்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.
இவள் அழகு பெண்களை ஆண்களாக விரும்பச் செய்கிறது என்கிறது வியாக்கியானம். ‘ஆடவர் பெண்மையை அவாவும் தோளினான்’ என்ற கம்பரின் கூற்றிற்கு நேர் எதிர்.
நாங்கள் உன் முன்வாசல் வந்து விட்டோம். கருமுகில் போன்ற நிறமுடைய கண்ணனின் பெயரைப் பாடுகிறோம். (‘பெண்டாட்டி’ என்பது இங்கு பேரழகு பொருந்திய பெண்மையை வாய்க்கப்பெற்றவளே என்று பொருள்.) முகில் வண்ணன் பேரழகிற்கு நீ தான் நிகர். ஆனால் நீ அசையாமல், பேசாமல் உறங்கிக் கொண்டிருக்கிறாய், ஏன் என்று எங்களுக்கு விளங்கவில்லை என்கிறார்கள் ஆய்ச்சியர்கள்.
அவள் உறங்கவில்லை என்பது இவர்களுக்குத் தெரியும்.