மண்ணில் தெரியுது வானம் அது நம் வசப்படலாகாதோ?
எண்ணி எண்ணி பல நாள் முயன்று இங்கு
இறுதியில் சேர்வோமோ -அட
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு பராசக்தியே!
இது பாரதியின் ஆத்மஜெயம். நம் கவிஞனின் பராசக்திதான் ஆண்டாளின் கண்ணன். அவனும் விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் கலந்திருப்பான். தான் என்ற அகந்தையை வெற்றி பெற வேண்டும் என்று பாரதி பாடுகிறான். ஆண்டாள் வழியைச் சொல்கிறார். எளிய வழி. மண்ணிலேயே கிடைக்கும் சொர்க்கம். பல ஆண்டுகள் தவமிருந்து நோன்பு நூற்றுக் கிடைக்கும் சுவர்க்கம் அதன் அனுபவம் கண்ணனையே நினைத்துக் கொண்டிருக்கும் ஆய்ச்சிக்கு மிக எளிதாகக் கிடைத்து விடுகிறது.
நான் முன்னால் கூறியது போல ஆண்டாளின் உலகம் பக்தர்கள் கனவுகளின் உலகம். கவிதையில் நமக்குக் காட்டப்படும் மாளிகைகள் உண்மையில் ஏழைகளின் கூரை வீடுகளே. அவற்றில் இருப்பவர்களுக்குக் கிடைத்த ஒரே சொத்து கண்ணன். அவனுக்காக ஒருவருக்கு ஒருவர் போட்டி இருக்கும். ஆனால் நம் எல்லோருக்கும் கிருஷ்ணானுபவம் நிச்சயம் என்பது அவர்கள் நினைக்கிறார்கள்.
“வாழும் வகையறிந்தேன் மைபோல் நெடுவரைவாய்/தாழும் அருவிபோல் தார்கிடப்ப, – சூழும்/திருமா மணிவண்ணன் செங்கண்மால், எங்கள்/பெருமான் அடிசேரப் பெற்று.” இது பேயாழ்வார் வாக்கு. நாங்கள் வாழும் வகையறிந்தவர்கள் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
இது மாயை, மார்க்ஸ் சொன்ன அபின், மக்கள் புரட்சியை மழுங்கச் செய்யும் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் இறையனுபவம் மண்ணிலேயே வானத்தைக் காட்டுகிறது, எங்கள் வாழ்க்கைகளுக்குப் பொருளை, பிடிப்பைக் கொடுக்கிறது என்று உலகெங்கும் இருக்கின்ற இறை நம்பிக்கை உடையவர்கள் கருதுகிறார்கள். அவர்கள்தாம் இன்று மிகப்பெரும்பாலானவர்கள். அவர்கள் மீது புரட்சியைத் திணிப்பது அவர்கள் வாழ்க்கைகளை நரகமாக ஆக்கும். அவர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். மண்ணில் வானம் வசப்படுவது வறுமையை முற்றிலும் ஒழிந்த பிறகுதான் என்பது முற்றிலும் உண்மை. ஆனால் வறுமை ஒழிவதற்கு பக்தி, இறை நம்பிக்கை இடையூறாக இருக்காது என்று பெரும்பாலான பக்தர்கள் நினைக்கிறார்கள் என்பதும் உண்மை.
இனி பாடல்:
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்!
“வாசல் செம்மினால் வாயும் செம்ம வேணுமோ? ஐஸ்வரியம் மிக்கால் பந்துக்களை ஏன் என்னலாகாதோ” என்று வியாக்கியானம் பேசுகிறது. “உனக்கு சொர்க்கம் கிடைத்து விட்டது. கதவைத் திறக்க மாட்டேன் என்கிறாய், சரி. ஆனால் பேசுவதற்கு என்ன கொள்ளை. கண்ணன் என்று சொத்து கிடைத்து விட்டதால ஏழைச் சுற்றத்தாரை மறந்து விட்டாயா”, என்று தோழியர் கேட்கிறார்கள். எங்கள் கண்களைத்தான் பட்டினி போட்டு விட்டாய், செவிகளையுமா? ஒன்றாக நோற்போம், ஒன்றாக குளிப்போம், ஒன்றாக கிருஷ்ணானுபவம் பெறுவோம் என்று சொன்னதெல்லாம் பொய்யா, என் அம்மனாய் (எங்கள் அம்மாவே)” என்கிறார்கள். ஏன் பேசவிலை என்பதற்கு அண்ணங்கராச்சாரியார் அழகாக விளக்குகிறார். அனுமனைக் கண்ட மகிழ்ச்சியில் சீதா பிராட்டி ஏதும் பேசாமல் சில நிமிடங்கள் நின்றாளாம். அதே போலத்தான் தோழியர்களின் கண்ணன் பெயரைச் சொல்லியே பாடி மகிழும் குரலைக் கேட்ட பேருவகையில் பேசாமல் நின்றாளாம். மேலும் என்னை அம்மா என்று அழைக்கிறார்களே என்ற கோபமும் சேர்ந்து கொண்டதாம்.
ஆண்டாள் பாடலில் உள்ளுறைந்து இருப்பது அவள் தோழியருக்குச் சொன்ன பதில். கண்ணன் இங்கு இல்லை. வீணாகப் பழி சுமத்துகிறீர்கள் என்று அவள் சொல்கிறாள். துளசியின் வாசனை தூக்குகிறதே என்கிறார்கள் அவர்கள். ‘அட, அவனுடைய பரிமளம் அவ்வளவு எளிதில் போகுமா? என்றோ வந்தவனின் வாசனை இன்று வரை இருக்கிறது’ என்று பதில் வருகிறது. தோழியர்கள் ‘சரி, சரி, இன்னும் கும்பகர்ணனிடம் தூக்கத்தை வாங்கிக் கொண்டவள் போலச் சோம்பேறியாக இருக்காதே அவனிடம் சீக்கிரம் செல்ல வேண்டும்’ என்று சொல்லி விட்டு அவளை ‘அருங்கலமே’ என்று அழைக்கிறார்கள். You, after all, are our megastar என்கிறார்கள்.