தில்லியில் காலையில் கீசுகீசென்று பறவைகள் பேசும் பேச்சரவம் இன்றும் எனக்குக் காலையில் கேட்கிறது. ஆனால் அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் திருநெல்வேலி வரதராஜப் பெருமாள் சன்னிதித் தெருவில் எனக்கு பறவைகளின் அரவத்தைக் கேட்ட ஞாபகமே இல்லை. அன்று காலையின் அரவங்கள்- ஓசைகள்- வேறு. கனத்த, கறுப்புப் போர்வையையும் துளைத்துக் கொண்டு திண்ணையில் படுத்துக் கொண்டிருந்த என்னை எழுப்பியது, பெண்கள் திருப்பாவையை முணுமுணுத்துக் கொண்டு கோலம் போடுவதற்காக வாசலைப் பெருக்கித் தெளிக்கும் ஓசை. எதிர்த்த வீட்டின் முன்னால் பால்காரர் பசுமாட்டைக் கொண்டு வந்து பால் கறக்கும் ஓசை, சிறிது தொலைவில் பஜனைக் கோஷ்டி பாடும் ஓசை போன்றவை. இவற்றின் கலவைதான் தூக்கத்தைப் போக்கியதாக நினைவு. ஆண்டாள் காலத்திலும் தூங்கியவர்கள் காதுகளின் விழும் ஓசைகள் எல்லாம் கலந்து விழுந்திருக்கும்.
கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சு-அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே?
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய் திற — ஏலோர் எம்பாவாய்.
ஆனைச்சாத்தன் பறவையை பரத்வாஜப் பறவை என்றும் ஆங்கிலத்தில் Greater Coucal என்றும் சொல்வார்கள். சிவப்பு, ஊதா, கறுப்பு கலந்து மின்னுவது. கோவை வடவள்ளி அருகே இருக்கும் நானா நானியிலிருந்து காலையில் நடக்கும் போதெல்லாம் இப்பறவையைப் பார்க்கத் தவறியதில்லை. ஆனால் ஜோடியாகப் பார்த்ததில்லை. சிலர் ஆனைச்சாத்தன் என்பது வலியன் பறவையைக் குறிக்கும் என்பார்கள். வாலில் இருக்கும் இறகு ஆங்கில v எழுத்தைத் தலைகீழாகக் கவிழ்த்தது போல இருக்கும் இரட்டைவால் குருவி. Drongo என்று நினைக்கிறேன். கரிய பறவை. இதை நான் தில்லியில் பலதடவைகள் பார்த்திருக்கிறேன். தமிழில் பறவைகளைச் சரியாக அடையாளம் காட்ட பெயர்கள் இல்லை என்பது வருந்தத் தக்கது. திரு ஜெகநாதன் போன்றவர்கள் இக்குறையைச் சரி செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அறிகிறேன். பறவைகளைப் பற்றி அறிய விரும்புபவர்கள் க்ரியா பதிப்பித்திருக்கும் ‘பறவைகள் (அறிமுகக் கையேடு)’ என்ற அழகிய புத்தகத்தை உடனே வாங்குங்கள். ஆசை மற்றும் ப. ஜெகநாதன் எழுதியது.
வியாக்கியானக்காரர்கள் இறைவனைப் பற்றியே (பகவத் விஷயம்) சிந்தித்துக் கொண்டு மெய்மறந்து கிடப்பவரை தோழிகள் அவர் வீட்டு வாசலில் திரண்டு எழுப்ப முயல்வதாகச் சொல்கிறார்கள். இறைவனை நினைத்து கொண்டிருப்பவர்கள் இறையடியார்கள் கூட்டத்தோடு இருப்பதையே விரும்புவார்கள். இதை அறிந்துதான் ஆண்டாள் பாகவதைகளைத் திரட்டிக் கொண்டு தோழியை எழுப்புகிறார். பாகவதைகள் கூட்டம் கூடியும் எழுந்து வராததால் பேய்ப்பெண்ணே என்று செல்லமாகக் கடிந்து கொள்கிறார்.
‘காசும் பிறப்பும்’ என்பது அச்சுத்தாலியும் ஆமைத்தாலியும் என்பார்கள். அதாவது இறைவனின் சின்னங்களான சங்கும் சக்கரமும் அச்சிட்ட தாலி. மற்றது ‘அக்குவடமுடுத்து ஆமைத்தாலிபூண்ட அனந்தசயனன்’ என்று பெரியாழ்வார் குறிப்பிட்ட ஆபரணமாக இருக்கலாம். கண்ணனுக்கு பிடித்த ஆபரணத்தை ஆய்ச்சியர்கள் அணிந்து கொண்டிருப்பது இயற்கைதானே. அவர்கள் தாலிகள் உரசி கலகல என்று சப்தமிட, மத்தினால் தயிர் கடையும் வேகத்தால் கட்டியிருந்த கூந்தல் அவிழ, தயிர் கடையும் போது எழும் முடை நாற்றத்தையும் மீறி பரிமளம் பரவுகிறதாம். கூடவே மத்தின் ஓசை.
நாயகப் பெண் பிள்ளாய் என்பதன் பின்னால் எல்லோருக்கும் முன்னால் நிற்கக் கூடிய நீ இப்படிப் படுத்துக் கொண்டிருக்கிறாயே இது நியாயமா என்ற கேள்வி மறைந்திருக்கிறது.
கேசவன் என்ற சொல்லிற்கு கேசி என்ற குதிரை வடிவத்தில் வந்த அரக்கனை அழித்தவன் என்றும் பொருள் கொள்ளலாம். கேசம் அடர்ந்தவன் என்றும் பொருள் கொள்ளலாம். இங்கு ஆய்ச்சியர்களின் அவிழ்ந்த கூந்தலுக்கு இணையாக அடர்ந்த கேசம் உடையவன் என்று பொருள் கொள்வதுதான் சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
தேசம், தேசு – தேஜஸ் – பளீரென்று ஒளி வீசுவது. ‘திருமா மணிவண்ணன் தேசு’ என்பது பேயாழ்வார் வாக்கு. பேய்ப் பெண் தேசமுடையவளாக மாறி விட்டாள் என்பதைக் கவனிக்க வேண்டும். என்ன சொல்லியாவது அவளை எழுப்ப வேண்டும் என்ற உந்துதலை கவிதை மிக அழகாகக் கொண்டு வந்திருக்கிறது.