இறைவன் தூங்குவானா?
இஸ்லாமிய மரபில் அல்லா உறங்குவதாகக் குறிப்பிடப் படவில்லை. ஆனால் கிறித்துவ மரபில் இறைவனை உறங்காதே எழுந்திரு என்று குறிப்பிடும் வாசகங்கள் இருக்கின்றன. பைபிளில் ஏழு இடங்களில் இருக்கின்றன.
உதாரணமாக, “என் தேவனே, என் ஆண்டவரே, எனக்கு நியாயஞ்செய்யவும் என் வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும்,’ என்று சங்கீதம் 35:23 சொல்கிறது. “ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் நித்திரை பண்ணுகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும்,” என்று சங்கீதம் 44:23 சொல்கிறது.
ஆனால் இந்து மரபில் உறங்கும் இறைவனை எழுப்பும் பாடல்கள் எண்ணற்றவை.
திருப்பாவையிலும் இறைவன் எழுப்பப்படுகிறான். ஆனால் அவன் எழுந்திருப்பதற்கு முன்னால் தோழியரை, நந்தகோபனை, யசோதையை, பலராமனை மற்றும் நப்பின்னையை ஆண்டாள் எழுப்புகிறாள். அடுத்த பத்து பாடல்கள் தோழியரை எழுப்பும் விதமாக அமைகின்றன.
கிருஷ்ணானுபவத்தை தனியாகவன்றோ அனுபவிக்க வேண்டும்? தோழிகளோடு சேர்ந்து அனுபவிக்க வேண்டிய அவசியம் என்ன? இக் கேள்விகளுக்கு அண்ணங்கராச்சாரியார் மிக அழகாகப் பதிலளிக்கிறார். கண்ணன் பெருங்காற்று. பெருங்காற்றில் “காலாழும், நெஞ்சழியும், கண்சுழலும்” (பெரிய திருவந்தாதி- நம்மாழ்வார்). எனவே தனியாகச் செல்ல முடியாது. பெருந்துணை அவசியம். இன்னொருவிதமாகச் சொல்லப்போனால் ஆண்டாள் ‘இன்கனி தனியருந்தான்’ என்ற கோட்பாட்டில் பிடிவாதமாக இருப்பவர். கூடி இருந்து குளிர விரும்புபவர். அவர் எல்லோரையும் எழுப்புவதில் வியப்பில்லை.
இனி பாடல்:
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
மார்கழி மாதக் குளிரில் அதிகாலையில் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கத் தோன்றுவது இயற்கை. ஆண்டாள் தன் தோழியிடம் ‘உலகம் விழித்துக் கொண்டு விட்டது, நீ உறங்காதே என்கிறார்’. ‘நீ கண்ணனையே நினைத்துக் கொண்டு உறங்காதிருக்கிறாய். உனக்கு இரவே கிடையாது. காலை வந்து விட்டது என்று எப்படி நம்புவது’ என்று தோழி கேட்க ஆண்டாள் யார் யாரெல்லாம் விழித்து கொண்டு விட்டார்கள் என்று சொல்கிறாராம்.
புள்ளரையன் கோவில என்றால் பக்ஷிராஜன், கருடனின் திருக்கோவில். புள் என்றால் கருடன் என்று பொருள் கொண்டு, கருடனுக்குத் அரையனான -தலைவனான- விஷ்ணுவின் கோவில் என்றும் பொருள் கொள்ளலாம். சங்கு என்றாலே வெள்ளை தானே? அது ஏன் வெள்ளை விளி சங்கு என்றால் விடிந்து விட்டதால் அதன் வெள்ளை நிறம் பளீரென்று தெரிகிறதாம். பூதனை உயிரை உறிஞ்சியும் வண்டியைக் காலால் உதைத்து முறித்த கண்ணன் தான் பாம்பின் மேல் அறிதுயில் கொண்டிருக்கும் வித்து. சகடத்தை, வண்டியை ஏன் கண்ணான் காலால் உதைக்கிறான்?மூவாரியப்படி கூறுகிறது: முலை வரவு தாழ்த்ததென்று மூரி நிமிர்த்த திருவடிகள் பட்டு முறிந்தது. அதாவது தாய்ப்பால் வருவதற்கு தாமதமானதால் கால்களை உதைத்து கண்ணன் வீறிடுகிறானாம். அவன் ‘வித்து’. உழவர்கள் விதைக்கும் வித்து பயிராக மாறி பலன் தருவது போல, திரும்பத் திரும்ப அவதாரம் செய்து உலகிற்கு பலனளிக்கும் வித்து இறைவன். தானே தன்னை விதைத்துக் கொள்பவன். அவனை உள்ளத்தில் கொண்டவர்கள் முனிவர்களும் யோகிகளும். முனிவர்கள் இறைவன் பெயரை என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள். யோகிகள் இறைவனை நினைத்துக் கொண்டு பக்தர்களுக்கும் தேவையானவற்றை தயராது செய்து கொண்டிருப்பவர்கள். ராமனுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த இலக்குவனையும் அவன் நினைவாகவே இருந்து ஆட்சி செய்துக் கொண்டிருந்த பரதனையும் போன்றவர்கள். அவர்கள் ஏன் மேல்ல எழுந்திருக்கிறார்கள்? பிள்ளைத்தாய்ச்சியாக இருப்பவர் குழந்தைக்கு ஊறு ஏற்பட்டு விடக் கூடாதே என்று மெல்ல எழுவது போல, இவர்கள் உள்ளத்தில் எம்பெருமான் இருப்பதால் அவன் ‘தளும்பாதபடி’ எழுந்திருப்பார்களாம். ஆய்ப்பாடியில் முனிவர்களும் யோகிகளும் எங்கு வந்தார்கள்? கண்ணன் பிறந்த இடமானதால் அவர்கள் மாட்டுக் கொட்டில்களில் பாடு கிடக்கின்றார்களாம். கண்ணனின் தரிசனத்தை வேண்டி.