ஆண்டாளின் ஐந்தாவது பாட்டை நினைக்கும் போதெல்லாம் அண்ணங்கராச்சாரியார் நினைவும் கூடவே வரும். அவரைச் சந்திக்க என் தந்தை கூட்டிச் சென்ற போது அவர் உடல்நலம் வெகுவாகக் குன்றியிருந்தது. பேச்சு மெல்லிதாக இருந்தது.
“சுவாமி திருமேனி இன்னும் க்ஷீணமாகத்தான் இருக்காப்பல தோன்றதே.”
“வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் பொழுதுன்னு ஆழ்வார் சாதிச்சிருக்கார். வாசிக்கறத்துக்கு கண்ணு சரியாத் தெரியல்ல. கேக்கறத்துக்கு காதில்ல. சாஷ்டாங்கமா பெருமாளைச் சேவிக்கறத்துக்கு கால் முட்டு இடம் கொடுக்க மாட்டேங்கறது. ஆண்டாள் சொன்ன மாதிரி வாயினால் பாடி மனதினால் சிந்தித்து பெருமாளைப் பூசிக்கறேன். அதையாவது செய்ய முடியற பாக்கியத்தைக் கொடுத்திருக்காரேங்கிற சந்தோஷத்தோடு இருக்கேன்.” பக்தி கொடுக்கும் சமன்பாடு எல்லாப் பக்தர்களுக்கும் வாய்க்காது.
இப்பாடலை பெரியவர்கள் விளக்கம் சொல்லிக் கேட்டால்தான் அதன் உள்ளே பொதிந்திருக்கும் ரத்தினங்கள் வெளிப்படும். திருவாய்மொழியில் நம்மாழ்வார் ‘உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின்’ னு சாதிக்கறார். ஆனால் ஆண்டாள் “வாயினால் பாடி மனதினால் சிந்திக்க”ங்கறா. முதல்ல பாடுங்கறா. பின்னால்தான் உணர வேணும் சிந்திக்கணும்னு சொல்றா. அது ஏன்?” என்று என் தந்தை கேட்டார். நான் எப்போதும் போல முழித்துக் கொண்டிருந்தேன். ஆழ்வார் வாழ்க்கையில் அடிப்பட்டவர். அவர் யோசிச்சு, ஆராயஞ்சப்பறம்தான் பாட்டெழுதி பெருமாளைச் சேவிப்பர். ஆனா ஆண்டாள் குழந்தை. குழந்தை முதல்ல யோசிக்காது. அதுக்குன்னு ஒரு spontaneity. முதல்ல உரக்கப் பாடும். அப்பறம்தான் சிந்தைனையெல்லாம்.’
இன்றையப் பாடல்:
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசு ஆகும் செப்பு-ஏலோர் எம்பாவாய்.
பரமபதத்திலிருந்து வடமதுரையில் தேவகிக்குப் பிறந்து ஆயர் குலத்தில் அணி விளக்காகத் தோன்றினான். அதாவது அரச மைந்தனாக உலகின் இருளைப் போக்கவில்லை. ஓர் ஆயனாகத்தான் அவன் அந்தகாரத்தைத் துரத்தி அடிக்கும் அணி விளக்காக ஆனான். ‘அந்தகாரத்தில் தீபம் போல் தாழ்ந்தார் பக்கலிலேயிறே குணம் பிரகாசிப்பது” என்று வியாக்கியானம் கூறுகிறது. அவன் இருக்கும் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஆயர்கள்தாம். பிராமணத்தியும் ஆய்ச்சி ஆகிறாளாம். அகங்காரத்தைத் துடைத்தால்தான் இருளை விலக்கும் இறையொளி தெரியும்.
‘தூய பெருநீர் யமுனை” – யமுனை எப்படித் தூய்மை பெற்றது? அது வாசுதேவனுக்கு வழி விட்டது மட்டுமல்லாமல், கண்ணனும் ஆய்ச்சியரும் அதன் தண்ணீரைக் குடித்து திரும்பக் கொப்பளித்ததால் அது தூய்மையானதாம். இறைவனின் எச்சிலும் பக்தர்களின் எச்சிலும் அதைத் தூய்மை ஆக்குகிறது. இன்னொன்றும் உரையாசிரியர் சொல்கிறார்கள்: “ராவண பயத்தால் அஞ்சியிருந்த கோதாவரி போலன்றிக்கே கம்சன் மாளிகைநிழல் கீழே வற்றிக் கொடுத்தபடி.” அதாவது ராவணபயத்தால் கோதாவரி நதி சீதையைக் காப்பாற்ற முடியவில்லையாம். யமுனைக்குத் தைரியம் இருந்ததாம்.
தாயைக் குடல் விளக்கம் செய்த தமோதரன் – இவனைப் பெற்ற வயிற்றுடையாள் என்ன நோன்பு நோற்றாள் கொலோ’ என்று பெற்ற தாயாரான தேவகிக்கும் வளர்த்து கண்ணினுண் சிறுத்தாம்பினால் கட்டிய யசோதைக்கும் பெருமை அளித்தவன். பக்தர்களின் கட்டு அவனால் கூட அவிழக்க முடியாத கட்டு.
தூயோமாய் என்ற சொல்லுக்கு வியாக்கியனங்கள் கூறும் விளக்கம் அற்புதமானது. அவர்கள் புறத்தூய்மையை ஒதுக்கித் தள்ளி விடுகிறார்கள். விபீஷணன் கடலில் குளித்து விட்டா இராமனிடம் வந்தடைந்தான்? திரௌபதி ஒற்றை ஆடையுடன்தானே இரு கையையும் தூக்கி இறைவனைக் கூப்பிட்டாள்? எனவே பக்தர்கள் உள்ளபடியே வந்தால் போதும். இதைத்தான் ரவீந்திரநாத் தாகூர் “Come as you are, tarry not over your toilet என்று தன் The Garderner நூர்லில் சொல்கிறார். இப்பாடலை ஆ.சீ.ரா என்று அழைக்கப்படும் ஆ சீனிவாச ராகவன் அழகாக மொழிபெயர்த்திருக்கிறார் – “உள்ளபடியே வா, ஒப்பனையில் பொழுதை ஓட்டி விடாதே”.
இதே போன்று தூமலர். எந்த மலராக இருந்தாலும் அது அநன்ய ப்ரயோஜனர் கை பட்டால் போதும். அதாவது அவனடியை அடைவதைத் தவிர வேறு குறிக்கோள் இல்லாத அடியார்கள்.
பகவத் ஞானம் வருகிறதற்கு முன் செய்த பிழைகளும் பக்தையான பின் அறியாமல் செய்த பாவங்களும் (அறியாத பிள்ளைகள் என்று ஆண்டாள் பின்னால் பாடுகிறாள்) இவன் பெயரைச் செப்பினால் தீயும் எரியும் பஞ்சுபோல உடனடியாக மறைந்து விடும் என்கிறாள்.
‘செப்பு’ என்பது தமிழில் இன்று புழங்குவதில்லை. தெலுங்கு மொழியில் இருக்கிறது. இதே போன்று பெருமாளைச் சேவிக்கிறோம் என்று வைணவர்கள் சொல்வார்களே தவிர தொழுகிறோம் என்று சொல்வதில்லை. தொழுகை இன்று இஸ்லாமியர் பயன்படுத்தும் சொல். பாலக்காட்டு பிராமணர்கள் பயன்படுத்தும் சொல்.