ஆழி மழைக் கண்ணா!

சில வருடங்களுக்கு முன்னால் என் மகனும் நானும் போர்னியோ (மலேசியப் பகுதி) சென்றிருந்தோம். ஸபா மாநிலத்தில் கினபடாங்கன் என்ற நதியில் படகுப் பயணம். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கும் போது, மழை வரும் அறிகுறிகள் தென்பட்டன. வானம் கறுத்துக் கொண்டே வந்தது. கண்ணுக்கு எதிரே, மிக அருகாமையில், பளீரென்று இதுவரை நான் கண்டிராத பிரகாசத்துடன், மின்னல் ஆற்றில் இறங்கியது. உடனே பெரும் சத்தம். இடிமுழக்கம் என்பதின் முழுப் பொருளை அன்றுதான் உணர்ந்தேன். இன்னும் அருகே மின்னல் இறங்கியிருந்தால் ஒரு நொடியில் கருகியிருப்போம் என்று படகோட்டி சொன்னார். மயிரிழையில் தப்பித்தோம். பெருத்த மழையினூடே ஒருவழியாக சேர வேண்டிய கரைக்குச் சேர்ந்தோம். தங்கியிருந்த அறையின் பாதுகாப்பைத் தழுவிக் கொண்ட பிறகுதான் பதட்டம் அடங்கி, உயிர் திரும்பியது. அப்போதுதான் ஆண்டாளின் பாசுரம் நினைவிற்கு வந்தது. “ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி” என்ற வரியின் உண்மையான பொருள் உறைத்தது. கண்ணுக்கு நேரே மின்னல் இறங்கி இடி முழங்கி, கரிய கடவுள் ஆற்று நீரை முகந்து கொண்டு சென்றிருக்கிறார் என்று தோன்றியது. நான் பார்த்தது ஒரு நதிப்பரப்பில் மின்னல்-இடி நாடகம். ஆண்டாள் சொல்வது ஆழியை. உலகைச் சுற்றியிருக்கும் பெரும் கடலை. கடலில் கண்ணன் செய்யும் விந்தையை.

ஆண்டாளின் பாடல்

ஆழிமழைக்கண்ணா! ஒன்றுநீகைகரவேல்
ஆழியுள்புக்குமுகந்துகொடார்த்தேறி,
ஊழிமுதல்வன்உருவம்போல்மெய்கறுத்து
பாழியந்தோளுடைப்பற்பநாபன்கையில்
ஆழிபோல்மின்னி, வலம்புரிபோல்நின்றதிர்ந்து,
தாழாதேசார்ங்கம்உதைத்தசரமழைபோல்
வாழஉலகினில்பெய்திடாய், நாங்களும்
மார்கழிநீராடமகிழ்ந்தேலோரெம்பாவாய்.

தமிழ் இலக்கியத்தின் அரிய செல்வங்களில் ஒன்று ஆண்டாளின் இப்பாடல். கவிஞர்கள் கண்ணுக்கு தெரியும் இயற்கையின் வடிவங்களையும் நிகழ்வுகளையும் உதாரணமாகக் காட்டி இறையிருவின் பரிமாணங்களை நமக்குக் காட்ட முயல்வார்கள். “கார்மேகம் போன்றவன்” “கடலினும் பெரிய கண்கள்” “பவளச் செவ்வாய்” போன்ற உதாரணங்கள். ஆனால் ஆண்டாள் இப்பாடலில் நேர் எதிராகச் செல்கிறார். மேகத்தின் வண்ணம்- ஊழி முதல்வன் உருவம்;. மின்னலின் ஒளி – இறைவன் கையில் இருக்கும், ஆழியின் (சக்கரத்தின்) ஒளி; இடிமுழக்கம்- இறைவனின் இன்னொரு கையிலில் இருக்கும் வெண்சங்கின், பாஞ்சஜன்யத்தின் அதிர்வு. மழை பொழிவது- சார்ங்கம் என்ற இறைவனின் வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகள்.

இங்கு ‘வாழ’ என்ற சொல் முக்கியமானது. இயற்கை வாழவும் வைக்கும். உயிர்களையும் வாங்கும். இறைவன் கையில் இருக்கும் ஆயுதஙகளும் அவ்வாறுதான். ஆண்டாள் இங்கு தெளிவாக வாழ்விற்காக, மகிழ்ச்சிக்காகப் பாடுகிறார். மக்களை வாழ வைக்க மழை பெய்தால்தான் நாங்கள் மகிழ்வோம் என்று சொல்கிறார். உலகம் முழுவதும் மழை பெய்ய வேண்டும் என்கிறார்.

‘மழைக்கண்ணா’ என்று ஆண்டாள் சொல்வது வருணதேவனை என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். அவன் கண் மட்டும் மழையன்று. ” ‘ஜகத்தை ஈரக்கையாலே தடவி நோக்கவல்லன்’ என்று ஈஸ்வரனலே மதிக்கப்பட்டவனல்லையோ நீ” என்றும் அவர்கள் சொல்கிறார்கள். எனவேதான் ‘கைகரவேல்’ என்றும் ஆண்டாள் சொல்கிறாள். கொடுக்க வேண்டியதை தாராளமாகக் கொடு குறைத்துக் கொடுத்து விடாதே என்கிறார். இது இறைவனின் ஔதார்யத்தை, வள்ளல்தன்மையைக் காட்டுகிறது என்றும் சொல்லலாம்.

இன்னொன்றும் சொல்லப்படுகிறது. எல்லையில்லாக் கடவுளான இறைவனின் குணக்கடலில் புகுந்து, அனுபவித்து, அதை உள்ளே அடக்கி கொண்டு உலகம் முழுவதும் சென்று மற்றவர்களுக்கு வழங்கும் அறிஞர்கள்தான் மேகம். ‘திருமாலின் திருமேனி ஒக்கும்’ பேறு பெற்று எங்கும் செல்பவர்கள் அவர்கள். இறைவனிடம் சிலர் கேட்டார்களாம்: “நீயே பிரபு என்றிருந்தோம், உன்னையொழியவும் சிலருண்டோ?” அதற்கு கண்ணன் கூறிய பதில்: “சோறும் தண்ணீரும் தாரகமாக இருப்பார்க்கு நான் பிரபு, ஸ்ரீவைஷ்ணவர்கள்தான் எனக்குப் பிரபுக்கள்”. உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று வருணன் வேண்டிக் கேட்க இவர்கள் அவன் தொண்டு செய்ய அனுமதித்தார்களாம். ‘இவர்களை வர்ஷதேவதை அடியேனுக்கு ஒரு கிஞ்சித்காரம் நியமித்தருள என்று பிரார்த்திக்க, இவர்கள் அவனுக்குக் கைங்கர்யம் நியமித்தபடியைச சொல்கிறது’ என்று ஸ்வாபதேச வியாக்கியானம் சொல்கிறது.

1 thought on “ஆழி மழைக் கண்ணா!”

 1. /ஆண்டாள் இப்பாடலில் நேர் எதிராகச் செல்கிறார்./

  Yes. I am reminded of another one like this.

  The opening lines of mullaippAttu go:

  நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
  வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை
  நீர் செல நிமிர்ந்த மாஅல் போல,
  பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
  கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி,
  பெரும் பெயல் பொழிந்த….

  invoking the comparison between the form of Vishnu and the water cycle again. The rising of the water from the sea to the clouds is likened to vAmana becoming trivakrama once he receives the water-anointation signifying the dhAnam.

  Prof.the.Gnanasundaram once mentioned how the usage of the அளபெடை in மாஅல், beautifully coincided with the image of the form of the lord expanding.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s