நேற்று இதை மறந்து விட்டேன்.
ஆண்டாள் பறை என்ற சொல்லை பல தடவைகள் பயன்படுத்துகிறார். வியாக்கியானக்காரர்கள் அதை வியாஜம் என்கிறார்கள். அதாவது ஒரு pretense. ஒரு காரணம். போலிக்காரணமாகக் கூட இருக்கலாம். இறைவனுக்கு அருள் புரிய ஒரு வாய்ப்புக் கொடுப்பது. ஆனால் தென்கலையாருக்கு அதுவும் தேவையில்லை என்று நினைக்கிறேன். நீ செய்ய வேண்டியதைச் செய்து கொண்டிரு அவன் நிச்சயம் பறைதருவான், அருள்புரிவான் என்று ஆண்டாள் சொல்கிறதாகவும் கொள்ளலாம். நம்மாழ்வர் அருளிச்செய்தபடி “வைகுண்டம் புகுவது மண்ணவர் விதியே”.
பாவை நோன்பு என்பது கூட ஒரு வ்யாஜம்தான்.
இனி அடுத்த பாட்டு.
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்!
ஆண்டாள் திருப்பாவை முழுவதும் எல்லோரையும், வையத்தில் வாழ்பவர்கள் எல்லோரையும், கருத்தில் கொண்டுதான் பேசுகிறார். அவருடைய தந்தை “தொண்டக்குலம்” (வைணவ அடியார்கள் கூட்டம்) என்று சொன்னால், இவர் ஒருபடி மேலே சென்று வையம் முழுவதையும் சேர்த்துக் கொள்கிறார்.
எல்லோராலும் வேதம் ஓதமுடியாது, எல்லோராலும் நித்தியானுசந்தானம் (தினப்படிச் சொல்லும் பாடல்கள்) செய்ய முடியாது. மார்கழி மாத்த்தில் கூட செய்ய முடியாது. ஆனால் இறைவனைத் தொழ முடியும், காலையில் நீராட முடியும். தானம் செய்ய முடியும், ஆந்தனையும் என்றால் முடிந்த அளவு. இதேயே திருமூலரும் சொல்கிறார்:
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.
“இன்னுரைதான். தீக்குறள் அன்று, கடுஞ்சொற்களைச் சொல்ல மாட்டோம்.” என்று ஆண்டாள் சொல்கிறார்.
ஏன் மையிடக் கூடாது? ஏன் மலர் சூடக் கூடாது? கண்ணனைக் காணாமல் கண்கள் அழகு பெறக் கூடாது. அவன் காலடியில் கிடந்த மலரைத்தான் முதலில் சூடிக் கொள்ள வேண்டும். ஆண்டாள் மட்டும்தான் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி. இங்கு அவர் தன்னைப் பற்றிப் பேசவில்லை. வையத்தில் வாழ்பவர்கள் அனைவரையும் பற்றிப் பேசுகிறார் என்பதை மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும்
ஐயம் என்றால் தகுதியுடைய பெரியவர்களுக்கு வேண்டும் காலத்தில் உதவுவது. பிச்சை என்றால் வேண்டி வருபவர்களுக்கு கொடுப்பது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். மேலும் ‘ஆந்தனையும் கைகாட்டி’ என்பதற்கு பொருள் பெறுபவர்கள் மனநிறைவு பெறும் வரையில் கொடுக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, நாம் நிறையக் கொடுத்து விட்டோம் என்ற நிறைவு நமக்கு வந்து விடக்கூடாது என்பதும்தான்.
ஐயம் என்றால் பெருமானின் புகழ் பாடுதல் என்றும் பொருள். பிச்சை என்றால் பாகவதர்களின், அதாவது அடியார்களின் புகழ் பாடுதல். இரண்டையும் முடிந்த அளவிற்குச் செய்ய வேண்டும் என்றும் அறிஞர்கள் சொல்கிறார்கள்
ஆண்டாள் ப்ரவிருத்தி, நிவிருத்தி என்பதைப் பற்றியும் சொல்கிறார் என்று வியாக்கியானக்காரர்கள் கருதுகிறார்கள். பிரவித்தி என்றால் பற்றிக் கொள்ள் வேண்டியவை. பரமன் அடி பாடுதல். காலையில் நீராடுதல். ஐயம், பிச்சையிடுதல். நிவிருத்தி என்றால் விட வேண்டியவை. “நெய், பாலுண்ணாமை. கண்மையிடாமை. பூச்சுடாமை. செய்யத்தகாதவை என்று கருதுப்படுபவற்றைச் செய்யாமை. தீய சொற்களைப் பேசாமை.
இவையெல்லாம் நிச்சயம் செய்ய வேண்டுமா? நிச்சயம் என்று ஆண்டாள் சொல்லவில்லை என்றுதான் நினைக்கிறேன். முடிந்த அளவு – ஆந்தனையும் – என்றுதான் ஆண்டாள் சொல்கிறார். விரத நாட்களில் குழந்தைகள் விரதம் இருந்தாலும், பசி தாங்காதே என்று அன்னை ரகசியமாக தந்தைக்குத் தெரியாமல் குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் கொடுப்பதில்லையா? அதே போலத்தான் ஆண்டாள் சொல்பவையும். முடியாவிட்டால் இறைவன் அளிப்பான் என்பது உட்பொருள்.
என் தந்தை சொல்வார். “ஆயர் குலத்தவர் என்று தங்களை எண்ணிக் கொண்டிருப்பவரை பாலும் நெய்யும் உண்ணாதே என்று சொல்வது, ஐயங்கார்களை புளியோதரை பக்கம் போகாதே என்று சொல்வதைப் போன்றது. அது நடக்கக் கூடியதா?”