ஒரு தற்கொலையும் ஒரு பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டும்

திமுகவிற்காக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் தமிழன் பிரசன்னாவின் மனைவி நேற்று தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். ஆனால் சமூக ஊடகங்களில் எப்போதும் போல பல வதந்திகள் உலாவத் துவங்கி விட்டன. என்னைப் பொறுத்தவரை காவல்துறையினர் விசாரணை செய்து ஒரு முடிவிற்கு வரும்வரை கூச்சல் போடாமல் அமைதியாக இருப்பதைத்தான் நேர்மையானவர்கள் செய்வார்கள். இது போன்ற சம்பவம் பூணூல் போட்ட பிரபலம் ஒருவர் வீட்டில் நடந்திருந்தால் சிலர் பெருங்கூத்தாடியிருப்பார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் அவர்கள் செய்வார்கள் என்பதால் அத்தகைய செயற்பாடு நியாயம் ஆகி விடாது.

அரசு அதிகாரியாக இருக்கும் இளைஞர் ஒருவர் மீது ஆனந்த விகடன் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியிருக்கிறது. அவர் முன்னுக்கு வந்து கொண்டிருக்கும், மிகவும் அறிவுத் திறன் கொண்ட இளைஞர். அவருடைய எதிர்காலமே இப்போது கேள்விக்குறியாக ஆகி விட்டது என்பதில் ஐயம் இல்லை. ஆனந்த விகடன் மிகுந்த பொறுப்புணர்வோடுதான் நடந்து கொண்டிருக்கும் என்று கருதுகிறேன். அவ்வாறு நடந்து கொண்டிராத பட்சத்தில் ஆனந்த விகடன் மீது அவர் அவதூறு வழக்குத் தொடர வேண்டும்.

அரசு அதிகாரிகள் எவ்வாறு நடந்து கொள்ள வெண்டும் என்பதற்கு தெளிவான வழிமுறைகள் இருக்கின்றன. ஒரு வழிமுறை (Every Government servant shall at all times do nothing which is unbecoming of a Government servant). அரசு அதிகாரி எவ்வாறு நடந்து கொள்ளக் கூடாதோ அவ்வாறு எல்லா நேரங்களிலும் நடந்து கொள்ளக் கூடாது என்று சொல்கிறது. இது போன்ற பாலியற் குற்றச்சாட்டுகளை இந்த வழிமுறையை அவர் மீறினாரா இல்லையா என்ற கோணத்தில்தான் விசாரிக்க வேண்டும். ஆனந்த விகடன் கட்டுரை பொதுவெளியில் இருப்பதால் நிர்வாகம் எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருக்க முடியாது. எடுக்கா விட்டால் வெளிப்படையாக குற்றம் சாட்டப்பட்ட பிறகும் அரசு ஏதும் செய்யாமல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டிற்கு அரசு ஆளாக நேரிடும். எனவே நிர்வாகம் ஆனந்த விகடனைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் இருக்கும் ஆதாரங்களைக் கேட்டு உடனடியாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

நான் அதிகாரியாக இருந்த காலகட்டத்தில் பாலியல் அத்துமீறல்கள் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருந்தன என்பதுதான் உண்மை. அலுவலங்களில் வேலை பார்க்கும் பெண்களே அத்துமீறல்களைச் சகித்துக் கொண்டு போகும் நிலையில்தான் இருந்தார்கள் என்பதும் கசப்பான உண்மை. விசாகா சட்டங்கள் வந்த பிறகுதான் நிலைமை சற்று மாறத் துவங்கியது.

இது நான் 2018ல் எழுதியது.

“என்னுடைய உதாரணத்தையே சொல்கிறேன். நான் பணியில் இருந்த நாட்களில் பல பெண்களோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தது. சிலர் எனக்கு இணையான அதிகாரிகள். மற்றவர்கள் என்னிடம் வேலை பார்த்தவர்கள். பல முறைகள் பெரும் வீழ்ச்சிக்கு மிக அருகாமையில் இருந்திருக்கிறேன். இப்போது நினைத்தால் என்னை வெட்கப்பட வைப்பவை. ஆனால் என்னைப் பிடித்து இழுத்து வைத்திருந்தது என்னுடைய மனைவியின் அன்பு. எளிமையான, நேரடியான அன்பு. பாலுணர்வுக்கு பல மடங்கு மேம்பட்ட அன்பு. அதனுடன் அவளுக்கு என் மீது இருந்த நம்பிக்கை. ஆண்களுக்கே உரித்தான நாய்க்குணத்திற்கு மாற்றாக அவை அமைந்தன. நாய்க்குணம் இல்லாமல் இருந்ததில்லை. ஆனால் அதைக் கட்டுப்படுத்தி ஓரளவு வெற்றி பெற முடிந்தது நான் செய்த தவப்பயன் என்றுதான் சொல்ல வேண்டும். நேர்மையாக வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று உண்மையாக நினைக்கும் ஒவ்வொரு ஆணும் தன்னைச் சுற்றி அறம் சார்ந்த வட்டம் ஒன்றை வரைந்து கொள்கிறான். அதன் விட்டத்தை அவன் வாழும் சமுதாயம் நிர்ணயிக்கிறது. அது இன்னும் குறுகலாக இருக்கக் கூடாதா என்ற நினைப்பு எப்போதும் இருந்து கொண்டிருந்தால் நல்லது.”

அந்த இளைஞர் என்னுடன் சில ஆண்டுகள் தொடர்பில் இருந்தார். மிகுந்த மரியாதையுடன் நாகரிகம் பேணுபவராகத்தான் எனக்குத் தெரிந்தார். அவர் இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரங்கள் அற்றவை, தவறானவை என்று நிறுவினால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.

அரசு வேலைகளில் இருக்கும் இளைஞர்கள் பெண்களோடு பழகுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இச்சம்பவம் உறுதி செய்கிறது. அத்துமீறல்கள் எவை என்பதைத் தீர்மானிப்பவர்கள் பெண்கள். இந்த அடிப்படை உண்மையை நம் இளைஞர்கள் உணர்ந்து கொண்டாலே போதும்.

5 thoughts on “ஒரு தற்கொலையும் ஒரு பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டும்”

 1. எனக்கு திருமணம் ஆகி 46 ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னை வழி தவறாமல் இருக்க கட்டிப் போட்டது என் மனைவியின் அன்பும் அவளது பேரணைப்பும்.
  அதை அவள் வாயாலேயே சொல்லுவாள். அவ்வளவு பயம் அச்சம் கவலை அக்கறை. என்மீது. அவளை விட்டு நான் வேறெங்கும் வழி தவறி போய்விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தாள். மனைவி அமைவதெல்லாம் என்பது சத்தியம். ஒரு 40 ஆண்டுகள் தன் உடலால் உள்ளத்தால் மனதால் என்னை கட்டிப்போட்டிருந்தாள் என்பதுதான் உண்மை.

  Like

 2. ஆனந்த விகடன் மிகுந்த பொறுப்புணர்வோடுதான் நடந்து கொண்டிருக்கும் என்று கருதுகிறேன். இப்படி நம்பும் நீங்கள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை தர வேண்டும் என்று தானே அய்யா எழுதி இருக்க வேண்டும். Poo ko வின் பெயரையும் குறிப்பிடவில்லை. நீங்கள் அவருடைய எதிர் காலத்தின் மீது தான் அதிகம் கவலையுறுவதாக சொல்லி இருக்கிறீர்களே தவிர தவறு நிரூபிக்கப்பட்டால் என்பதை எழுதவே இல்லயே.

  நீங்களே கசப்பான உன்மை என்று எழுதிய பல அனுபவங்களுக்குப் பிறகும் பெண்கள் இவ்வளவு பெரிய அதிகாரி எனினும் ஏதோ ஒரு தைரியத்தில் வெளியே கொண்டு வர நினைப்பதை பாரட்டவோ நாங்கள் இருக்கிறோம் உண்மையாய் இருந்தால் முன்வாருங்கள் என்று நம்பிக்கை அளிக்கவில்லை எனினும் ஆதாரம் அற்றவை தவறானவை என்றால் சந்தோசப் படுவேன் என்றே எழுதி உள்ளீர்கள்.

  பல டீவீட்கள், சில பெண்கள் அவர்கள் fb id இல் இருந்தே எழுதியும் வளம் வந்தன. இவர் மேல் உள்ள குற்றச்சாட்டு ஒருத்தர் எழுப்பியது இல்லை. பலர். அதிகாரி ஆன பிறகானது மட்டும் அல்ல. கல்லூரி நண்பர்களும் சிலர் கூறியுள்ளனர். சிலரை அணுகி இருந்தாலோ இதன் உண்மைத் தன்மை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். குற்றச்சாட்டு ஒருவரிடமிருந்து வரவில்லை. பலர்.

  ஒரு நபர் 18, 19 வயதில் அனுப்பும் சில அசிங்கமான புகைப்படங்களை பயத்தில் டெலீட் செய்யவே பாவம் பெண்களுக்குத் தோன்றுகிறது. என்ன செய்வது. மேலும் நேரில் கையை மேலே போட்டுப் பேசுவதற்கு எங்கே ஆதாரம் தேடுவோம்?
  உங்களிடம் மிக மரியாதை உடன் நடந்து கொண்டதாக ஒரு வரி எழுதி இருக்கிறீர்கள். 5000 நண்பர் பட்டியலில் கண்டிப்பாக 4900 பேருடன் அப்படித்தான் மரியாதையாக இருந்திருக்க வேண்டும் அல்லவா. இந்த கட்டுரையைப் படிக்கும் பாதிக்கபட்ட பெண்களின் மனநிலையை நினைத்துப் பாருங்கள். பல வருடங்கள் அத்துமீறல்களைச் சகித்துக் கொண்டு போகும் பெண்கள் எப்போதாவது பயத்தை மீறி வெளியே வருகிறார்கள். நாம் அவர்களுக்கே அதிக நம்பிக்கை அளிக்க வேண்டும் என்று நம்புகிறேன்.

  Like

  1. அன்புள்ள பவித்ரா, உங்கள் மனநிலை எனக்குப் புரிகிறது. அவர் இளைஞர், வாழ்க்கையில் பல சாதனைகளைப் புரிய வேண்டியவர் என்பது உண்மை. அதனால்தான் அவர் எதிர்காலத்தைப் பற்றி எழுதினேன். அவர் மிக முயற்சி செய்து முன்னுக்கு வந்தவர் என்பதும் உண்மை. எனவே அவருடைய நிலையைக் குறித்து வேதனை இயல்பாக எனக்கு வந்தது என்பதும் உண்மை. அவ்வுண்மையை நான் மறைக்க விரும்பவில்லை. அதனால் பெண்கள் தரப்பில் நியாயம் இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. அவர்கள் யாரைப் பற்றியும் எனக்கு ஏதும் தெரியாது. ஆனால் அவர்களிடம் நீதி மன்றங்களில் நிறுவக் கூடிய ஆதாரங்கள் ஏதும் இருந்திருந்தால் சைபர் குற்றவியல் துறையை நாடியிருப்பார்கள்.( இப்போது கூட இருந்தால் நாடலாம்.). அவர் பாலியல் அத்துமீறல்கள் செய்திருந்தால் அவை சட்டத்திற்கு புறம்பாக இல்லாவிட்டால் கூட தண்டனை அளிக்கக் கூடிய அதிகாரம் இன்று நிர்வாகத்தின் கையில் மட்டும்தான் இருக்கிறது. எனவேதான் நிர்வாகம் இதை எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் நான் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.
   நான் பத்து ஆண்டுகள் தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாகப் பணியாற்றியிருக்கிறேன். உண்மை என்பது சிக்கலானது. பார்த்த உடனேயே புலப்பட்டு விடாது என்பது என்னுடைய அனுபவம் சொல்லிக் கொடுத்திருக்கிறது. எனவே பலர் குற்றம் சாட்டுவதால் அவரை குற்றவாளி என்று விசாரிக்காமலேயே கழுவில் ஏற்ற நான் தயாராகவில்லை. விசாரணை நடந்து குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் நிர்வாகம் தக்க தண்டனை கொடுக்கும் என்று நம்புகிறேன். கொடுக்கவிட்டால் உங்களோடு சேர்ந்து நானும் குரல் கொடுப்பேன்.
   நம் சமூகத்தில் ஆண்-பெண் இடையே இருக்க வேண்டிய வரைமுறைகள் இன்னும் சரியாக வகைப்படுத்தப்படவில்லை என்பது உண்மை. ஆண் தனக்கு கண்ணுக்குத் தெரியாத அதிகாரங்களும் உரிமைகளும் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பதும் உண்மை. ஒருவரை எந்த விசாரணையும் இல்லாமல் கழுவில் ஏற்றுவதால் இவற்றை மாற்ற முடியாது.
   இன்னொன்றும் யோசித்துப் பார்க்க வேண்டும். இவருக்கு உளவியல் ரீதியாக பல சிக்கல்கள் இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் வல்லுனர்களின் உதவியில்லாமல் வெளியே கொண்டு வர முடியாது. மனநோய் இருப்பவர் என்று வல்லுனர்கள் கருதினால் அவருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று நீங்களும் சொல்ல மாட்டீர்கள். இவை அனைத்தும் விசாரணையின் போதுதான் வெளியில் வரும்.

   Like

 3. “பலர் குற்றம் சாட்டுவதால் அவரை குற்றவாளி என்று விசாரிக்காமலேயே கழுவில் ஏற்ற நான் தயாராகவில்லை.” அவ்வாறு சொல்ல வில்லை ஐயா. கொஞ்சம் நம்பகத்தன்மை கூடலாம் இல்லையா. அதும் இல்லாமல் எங்கள் கல்லூரி மாணவிகளிடம் அவரைப் பற்றி விசாரிக்காமல் நான் அவரை எதிர்க்கவில்லை.

  மனநோய் இருப்பவர் என்று வல்லுனர்கள் கருதினால் அவருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று நீங்களும் சொல்ல மாட்டீர்கள் இதயும் யோசித்தேன். இப்படி உறுதி செய்யப்பட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஏன் எனில் அவரைப் பல இளைஞர் இளைஞிகள் எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். கஷ்டப்பட்டு முன்னேறியவர். ஆகையால் இப்படி நிரூபிக்கப்பட்டால் அனைவரும் அதில் ஆவது நிம்மதி அடைவோம்.

  “அரசு வேலைகளில் இருக்கும் இளைஞர்கள் பெண்களோடு பழகுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இச்சம்பவம் உறுதி செய்கிறது. அத்துமீறல்கள் எவை என்பதைத் தீர்மானிப்பவர்கள் பெண்கள். இந்த அடிப்படை உண்மையை நம் இளைஞர்கள் உணர்ந்து கொண்டாலே போதும்.” — இந்த வரிகள் மிகச் சந்தோசத்தை தந்தது. இந்த புரிதல் இருந்தால் அனைவரும் நிம்மதியாக இருக்கலாம்.

  அவர் மேல் உள்ள அக்கறையைப் புரிந்து கொள்ள முடிகிறது. கூடவே குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் முன் வாருங்கள் நாங்கள் இருக்கிறோம் என்ற பெண்களுக்குத் தைரியம் சொல்லும் வகையில் வார்த்தைகள் குறைவாக இருந்ததற்கு
  இப்பொழுதும் சிரிய மனவருத்தம்.

  உங்கள் நேரத்தை ஒதுக்கிப் பொறுமையாக எனக்குப் பதில் அளித்ததற்கு நன்றி!!

  Like

 4. Excuse me being an இலக்கணத் திராவிடன் (Grammar Nazi).

  This line

  /அரசு அதிகாரி எவ்வாறு நடந்து கொள்ளக் கூடாதோ அவ்வாறு எல்லா நேரங்களிலும் நடந்து கொள்ளக் கூடாது என்று சொல்கிறது./

  Would be more precise if written thus:

  அரசு அதிகாரி எவ்வாறு நடந்து கொள்ளக் கூடாதோ அவ்வாறு எந்த நேரத்திலும் நடந்து கொள்ளக் கூடாது என்று சொல்கிறது.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s