தமிழ்நாடு என்ற பெயர் தமிழ்நாடு என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்ததற்கு முன்பே தமிழன் அறிந்திருந்தது. தமிழனுக்கு என்றும் பிடித்தமான பெயர் அது. செந்தமிழ் நாடு என்னும் போதினிலே என்று பாரதி பாடியிருக்கிறான். நாடு என்றாலே தனி நாடு மட்டும்தான் என்ற பொருள் என்றுமே தமிழில் இருந்ததில்லை. எனவே தமிழ்நாடு என்றால் தனிநாடு என்று வலிந்து பொருள் கொண்டு அதை மாற்ற வேண்டும் என்று கூச்சல் போடுவது முட்டாள்தனம்.
அதே போல தமிழகம் என்பதும் தமிழனுக்குப் பிடித்த பெயர். குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குப் பிடித்த பெயர்.
“கழகம் வென்றது! அதைத் தமிழகம் இன்று சொன்னது!
இனித் தமிழகம் வெல்லும்!- அதை நாளைய தமிழகம் சொல்லும்!”
இது திரு ஸ்டாலின் ஒரு மாதத்திற்கு முன்னால் சொன்னது. கழகம் வென்றது தமிழ்நாட்டில்தான். அவர் நாளையத் தமிழகம் வெல்லும் என்று சொன்னதும் தமிழ்நாட்டைக் குறித்துதான். எனவே சிலர் தமிழகம் என்று மட்டும்தான் சொல்ல வேண்டும் என்பதால் அச்சொல் தீண்டத்தகாததாக ஆகி விடாது.
இன்னொன்றும் சொல்லியாக வேண்டும்.
திமுகவிற்குச் சாபக்கேடாகத் திரிந்து கொண்டிருக்கும் ஹிட்லரிய இனவெறியினரையும் இலக்கிய உலக்கை பட்டத்தோடு கனவு இல்லமும் கிடைக்காதா என்று காத்திருக்கும் அரையணா அறிஞர்களையும், பிரிவினைப் பொறுக்கிகளையும் இச்சர்ச்சை சிலிர்க்க வைத்து விட்டது. உள்நாட்டுப்போர் மூளும் என்று அம்பேத்கர் சொல்லியிருக்கிறார் என்று ஒரு முழுப் பிரிவினைவாதி எழுதுகிறார். அம்பேத்கர் தேவைப்பட்டால் இந்தியா Unitary State ஆக மாறும் என்றும் சொல்லியிருக்கிறார். உள்நாட்டுப் போர் மூண்டால் நான் முன்னால் சொன்னதுபோல முள்ளிவாய்க்கால் பிள்ளை விளையாட்டுப் போலத் தோன்றத் துவங்கி விடும். தமிழக மக்கள் கொத்துகொத்தாக மடிய வேண்டும் என்ற எண்ணமுள்ளவர்களும் தமிழ் நாட்டிற்கும், இந்தியாவிற்கும் துரோகம் செய்ய நினைப்பவர்களுமே உள்நாட்டுப் போரைப் பற்றி இவ்வளவு எளிதாகப் பேச முடியும்.
திமுக இவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
திமுக இன்று வரலாற்றின் முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. ‘அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு’ என்று வெற்று வசனம் பேசிக் கொண்டிருந்த திமுகவிற்கும் இன்றைய திமுகவிற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என்ற கொள்கையின் மீது தெளிவும் பிடிப்பும் இருக்கும் ஒரே கட்சி இந்தியா முழுவதிலும் திமுகவாகத்தான் இருக்க முடியும். மற்றைய எல்லா மாநிலக் கட்சிகளிலிருந்தும் அதை வேறுபடுத்துவது இக்கொள்கை மட்டும்தான். இதை நான் இன்று சொல்லவில்லை. பல ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்ட்டிருக்கிறேன். ஆனால் அவ்வதிகாரங்கள் இந்தியா ஒரே நாடு என்ற அடித்தளத்தின் மீது தான் கட்டபடும் என்ற உறுதிமொழியை கட்சி இதுவரை கொடுக்கத் தவறி விட்டது என்றுதான் நான் நினைக்கிறேன்.
இதற்குக் காரணம் தனித்தனியாகவும் சேர்ந்தும் இயங்கக் கூடிய மூன்று குழுவினர். இவர்கள்:
- பெரியாரின் ஹிட்லரிய இனவாதத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அலையும் அழித்தொழிப்பு வெறியர்கள்.
- விருதுகளையும், பல்கலைக்கழகப்பதவிகளையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், அடிப்படை நேர்மை அறவே அற்ற அரையணா அறிஞர்கள். மற்றும்
- இந்தியாவைப் பிரித்தே தீர வேண்டும் என்று கனவு கண்டுக் கொண்டிருக்கும் பொறுக்கிகள்.
இக்குழுவினரை இனம் கண்டு கொள்ள வேண்டிய கட்டாயம் கட்சிக்கு இருக்கிறது. இவர்களை ஒதுக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. வெளியில் இருந்து கூச்சல் போடட்டும். எதிர்கூச்சல் ஹிந்துத்துவர்களிடமிருந்து வரும். தமிழக மக்களுக்குப் பொழுது போகும். எனக்கும் பொழுது போகும். உதவாக்கரை ஊடகங்களுக்குத் தீனி கிடைக்கும். ஆனால், நடுவீட்டிற்குக் கொண்டு வந்தால் கட்சிக்கு எந்தப் பலனும் இல்லை. மாறாக தங்கள் வெறித்தனத்தால் இவர்கள் கட்சியை நெறித்து மூச்சடைக்கச் செய்து விடும் அபாயம் இருக்கிறது.
திமுகவில் உண்மையான அறிஞர்கள் இருக்கிறார்கள், இந்தியா பிரிய வேண்டும் என்று எண்ணாதவர்கள் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் ஒன்று சேர வேண்டும்.
அவர்கள் தூக்கிப் பிடிக்க வேண்டிய முக்கியமான ஒரே கொள்கை மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள். தமிழ்நாடு இன்று எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு இதில் இருக்கிறது.
இதை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல திமுக செய்ய வேண்டியது என்ன?
- முதலில் அசைக்க முடியாத அடித்தளம் பிரிக்க முடியாத இந்தியா என்று திமுக சொல்ல வேண்டும்.
- பிரிந்து போகும் அதிகாரம் எந்த மாநிலத்திற்கும் கிடையாது என்பதையும் உறுதிபடச் சொல்ல வேண்டும்.
- மாநிலங்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாக வரையறுத்து ஓர் ஆவணத்தைத் தயார் செய்து அதை எல்லா மாநிலங்களுக்கும் (பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் உட்பட) அனுப்ப வேண்டும். அவர்கள் ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு, பெரும்பாலோனரகளின் சம்மதங்களைப் பெற்று வரைவு ஒன்றைத் தயாரிக்க வேண்டும்.
- அதற்கு இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற கடுமையாக உழைக்க வேண்டும்.
இது ஒரு சில ஆண்டுகளில் நடக்கக் கூடியது அல்ல. இப்படித்தான் நடக்கும் என்ற கட்டாயமும் இல்லை.
ஆனால் இந்தியா ஒரே நாடாக இருந்தால்தான் தமிழ்நாடு வளமாக இருக்கும் என்ற அடிப்படையை ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்று திமுகவிற்கு உயர்த்தி சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. “பிரிவினை வேண்டாம் என்று சொல்லி விட்டோமே தவிர பிரிவினைக்கான காரணங்க்ள் இன்னும் இருக்கின்றன” என்று சொல்வது திமிர்த்தனம் மட்டுமன்று, அடிமுட்டாள்தனம். இவ்வாறு சொல்வதால் தமிழகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்பதை உணர வேண்டிய கட்டாயமும் கட்சிக்கு இருக்கிறது.
மேற்கூறியது அனைத்தும் பார்ப்பனச் சூழ்ச்சியின் ஒரு அங்கம் என்று ஹிட்லரிய இனவெறிச் சாக்கடையில் குளித்துக் கொண்டிருப்பவர்களும் அரையணா அறிஞர்களும் பிரிவினைப் பொறுக்கிகளும் நிச்சயம் சொல்வார்கள். சூழ்ச்சியா இல்லையா என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ளும் தன்மை கொண்டவர்கள் திமுகவில் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
/ஆனால் இந்தியா ஒரே நாடாக இருந்தால்தான் தமிழ்நாடு வளமாக இருக்கும் என்ற அடிப்படையை திமுக ஏற்றுக் கொண்டிருப்பதை உயர்த்திச் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது./
திமுக இதை ஏற்றுக்கொண்டிருப்பதாக நீங்கள் சொல்வது கொஞ்சம் wishful thinking.
ஒரு பேச்சுக்கு இதை ஏற்றுக்கொண்டாலும், இந்நிலைப்பாட்டை உயர்த்திச் சொல்லவேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு இருப்பதாக எண்ணுவதற்கில்லை.
இரண்டையும் விளக்குகிறேன்.
1) 2018ல் கூட திராவிடநாடு கோரிக்கை மீண்டெழுந்தால், அதை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக ஸ்டாலின் கூறினார் https://scroll.in/latest/872338/dmk-leader-mk-stalin-says-he-hopes-southern-states-come-together-to-demand-separate-dravidanadu
இது வெறும் posturing தான் என்றாலும், ஏதோ fringe elementகளின் பம்மாத்து அல்ல. கட்சித்தலைவர், இன்றைய முதல்வர் சொன்னது.
2) இந்தியாவுடன் இணைந்திருக்கவேண்டும் என்று உயர்த்திச் சொல்லவேண்டிய ‘கட்டாயம்’ நிச்சயம் அவர்க்கு இல்லை. 2019, 2021 தேர்தல் வெற்றிகள் நிரூபித்தது இதைத்தான் : ‘தமிழ்நாட்டை (தமிழனை) டில்லி (வடக்கன்) வதைக்கிறது’ என்று மீண்டும் மீண்டும் சொல்வது மாபெரும் வாக்குமகசூலுக்கு உத்தரவாதம்.
திராவிடத்து டியட்ரிஃ எக்ஹார்ட் என்று போற்றத்தக்க பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளை எல்லாம் தூசி தட்டி எடுத்து தேர்தல் விளம்பரத்தில் பயன்படுத்தினர். பொதுமக்கள் பலருக்கு இது resonate ஆகும் என்று, இந்தியாவின் முக்கிய தேர்தல் வியூக ஆலோசகர் உட்பட, கட்சி மேலிடம் போட்ட கணக்கு இது. இவர்களுக்கு ஏன் ‘இந்திய தேசிய ஒருமைப்பாட்டை உயர்த்திக் காட்டவேண்டிய கட்டாயம்’ இருக்கிறதாக எண்ண வேண்டும்?
The basis of optimism is sheer terror என்று ஆஸ்கர் வைல்ட் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது.
LikeLike
நான் சொல்ல வந்தது சரியாக வரவில்லை. மாற்றியிருக்கிறேன். அதாவது இந்தியா என்பது அடித்தளம் என்பற்கு முக்கிய காரணம் அதுதான். அதை ஏற்றுக் கொண்டால்தான் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் என்பதை முன்னெடுத்துச் செல்ல முடியும். மிக்க நன்றி.
LikeLike