பெரியாரியச் சோம்பேறிப் பேராசிரியர்கள் பண்டைத் தமிழ் இலக்கியத்தை ஒதுக்கித் தள்ள வேண்டும்!

தமிழன் முதன்முதலில் இயற்கையைத்தான் வழிபட்டான். அதனால் அவனுக்கு மதம் கிடையாது என்று சொல்வது கடைந்தெடுத்த முட்டாள்தனம்.

தமிழன் மட்டுமல்ல, உலகெங்கிலும் மனிதன் ஆரம்பகாலங்களில் இயற்கையைத்தான் வழிபட்டான். ஆவி வழிபாடு, இயற்கை வழிபாடு, குலக்குறி வழிபாடு, முன்னோர் வழிபாடு போன்ற வழிபாட்டு முறைகள் உலகெங்கிலும் உள்ள பழங்குடி மக்களுக்குச் சொந்தம். அவற்றிலிருந்து வளர்ச்சி அடைந்துதான் மதங்கள் பிறந்தன.

வேதங்களும் இயற்கை வழிப்பாட்டை முன்னிறுத்தின. காயத்திரி மந்திரம் “செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம். அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என்றுதான் சொல்கிறது.

சங்ககால வழிபாட்டு முறையைப் பற்றி வரிந்து வரிந்து எழுதுபவர்கள் ஒன்றை வசதியாக மறந்து விடுகிறார்கள். வழிபடுபவர்கள் பாடல்களை எழுதுபவதில்லை. அவர்களைப் பார்ப்பவர்கள்தாம் அவற்றை எழுதியிருக்கிறார்கள். இது இன்றைய பழங்குடி மக்களைப் பார்த்து எழுதும் கட்டுரை போன்றது. கட்டுரை எழுதுபவனும், பழங்குடி மக்களும் ஒன்றாகி விட மாட்டார்கள். இதே போன்றுதான் சங்க இலக்கியப் புலவர்களும். அவர்கள் தங்கள் காலத்தில் பார்த்தவற்றை, கவனித்தவற்றை எழுதினார். உதாரணமாக தொல்காப்பியரை எடுத்துக் கொள்வோம்.
அவர் சொல்கிறார்:

காலம் உலகம் உயிரே உடம்பே
பால்வரை தெய்வம் வினையே பூதம்
ஞாயிறு திங்கள் சொல்என வரூஉம்
ஆயீ ரைந்தொடு பிறவும் அன்ன
ஆவயின் வரூஉம் கிளவி யெல்லாம்
பால்பிரிந் திசையா உயர்திணை மேன.

பால்வரை தெய்வம் என்பது பரம்பொருளைக் குறிக்கிறது என்பது தெய்வச்சிலையார் உரை.

ஐம்பூதங்களையும் தெய்வத்தையும் வழிபடும் தமிழன் மற்றவர்களையும் வழிபடுகிறான் என்று தொல்காப்பியர் கூறுகிறார்:

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே

இது திருமால், முருகன், இந்திரன், வருணன் போன்ற தெய்வங்களைக் குறிப்பிடுகிறது.
இதே தொல்காப்பியர் சமூக வளர்ச்சியை
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப என்ற சூத்திரத்தின் மூலம் குறிப்பிடுகிறார். எனவே அவர் வாழ்ந்த சமூகம் சடங்குகள் தோன்றிய பிறகுதான் இருந்திருக்க வேண்டும். இவரே” நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய” என்றும் சொல்கிறார். “அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபின் அரசர் பக்கமும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்” என்றும் அவர் சொல்கிறார். “காட்சி, கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல் என்று இருமூன்று மரபில் கல்லொடு புணர” என்று வீரக்கல் நடுவது பற்றியும் குறிப்பிடுகிறார்.

எனவே தமிழில் இலக்கியம் தோன்றிய காலத்திலிருந்து சமயம் இருந்திருக்கிறது. பல்வேறு விதமான வழிபாடுகளும் – இயற்கை, முன்னோர், ஆவி, குலக்குறி வழிபாடுகள் உட்பட இருந்திருக்கின்றன. இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று இணைந்து இயங்கி இருந்திருக்கின்றன. இன்றும் அவ்வாறே நடக்கிறது.

சங்க இலக்கியத்தில் கூறப்படும் கடவுள்கள் இந்தியா முழுவதும் வழிபடக் கூடிய கடவுள்கள். வழிபாட்டு முறைகளில் மாற்றம் இருக்கலாம். ஆனால் வழிபடும் கடவுள்களில் மாற்றம் அனேகமாக இருந்ததில்லை.

மாயோன், சேயோன் போன்றவர்கள் தனித்தமிழ்க் கடவுள்கள் என்று சொல்வது பித்துக்குளித்தனம். சங்க இலக்கியம் அவ்வாறு சொல்லவில்லை.
திருமாலை எடுத்துக் கொண்டால் அவனுடை புட்கொடியைப் பேசுகிறது. பாம்பணையைப் பேசுகிறது. சங்கு சக்கரத்தைச் சொல்கிறது. திருமகளை மார்பில் உடையவன் என்று சொல்கிறது.

“தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ” என்று அவனை வணங்குகிறது.

செவ்வேள் என்று அழைக்கப்படும் முருகன் சிவனுக்கும் உமையவளுக்கும் கார்த்திகைப் பெண்டிருக்கும் பிறந்தவன் என்று பரிபாடல் தெளிவாகக் கூறுகிறது. சூரபதுமனை அழித்ததையும் கூறுகிறது. ஆறுமுகத்தையும் பன்னிரு கைகளையும் கூறுகிறது. திருமுருகாற்றுப்படை முருகனின் ஆறு முகங்களில் ஒரு முகம் அந்தணர் வேள்வியை ஏற்கும் என்கிறது:
ஒருமுகம்,
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே

பெரியாருக்கு நேர்மையிருந்ததால் அவர் சங்ககாலத்திலிருந்தே தமிழ் இலக்கியம் என்பது பார்ப்பனக் குப்பை என்று ஒதுக்கினார். திருக்குறளை வேண்டாவெறுப்பாக ஏற்றுக் கொண்டார். பெரியாரிய, திராவிடச் சோம்பேறிப் பேராசிரியர்களுக்கு கடுகளவாவது நேர்மை இருந்தால் பெரியாரைப் போல சங்க இலக்கியத்திலிருந்து தமிழர்கள் படைத்தவற்றையெல்லாம் -சங்க இலக்கியம்,கீழ்கணக்கு நூல்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சிற்றிலக்கியங்கள், கம்பராமாயணம் போன்றவற்றை -குப்பை என்று ஒதுக்க வேண்டும். பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி, படைப்புகளிலிருந்து திராவிட மதத்தைத் துவங்க வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s