திப்பு மறுபடியும் பேசப்படுகிறார்.
சிலருக்கு அவர் சுதந்திரப் போராட்ட வீரர். வெள்ளையரை வெளியேற்ற அயராது
பாடுபட்டவர். மதச்சார்பின்மையின் சின்னம். சிலருக்கு அவர் இஸ்லாமிய அடிப்படைவாதி. இந்துக்களை வேரோடு ஒழிக்க, விடாது முயற்சி செய்தவர். இந்திய வரலாற்றின் மிகப் பெரிய கொடுங்கோலர்களில் ஒருவர்.
வரலாறு என்ன சொல்கிறது?
இதை அறிய நாம் சில கேள்விகளக் கேட்க வேண்டும். பதில்களை வரலாற்றுப் புத்தகங்களில், வரலாறு விட்டுச் சென்ற சுவடுகளில் தேட வேண்டும். திப்புவைப் பற்றி வெள்ளைக்காரர்கள் (பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை சார்ந்தவர் மட்டுமல்ல, பிரெஞ்ச், போர்ச்சுகீசியர்போன்றவர்களும்) பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார்கள். இவற்றில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தைச் சார்ந்தவர் எழுதியிருக்கும் புத்தகங்களின் நம்பகத்தன்மை குறைவு என்று வில்லியம் டால்ரிம்பில், கிரீஷ் கர்னாட போன்றவர்கள் கருதுகிறார்கள். குறைவு என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அவை முற்றிலும் பொய்களைச் சொல்கின்றன என்று சொல்வது சரியாக இருக்காது. வெள்ளைக்காரர்களைத் தவிர, ஹைதர் திப்பு காலங்களில் அவர்களது அரசவையில் பணியாற்றிய இரானிய அறிஞரான கிர்மானி 1802 ஆண்டு அவர்கள் ஆண்ட காலத்தைப் பற்றி பற்றி பாரசீக மொழியில் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தின் நம்பகத்தன்மையை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. திப்புவே எழுதிய கடிதங்கள் பல நமக்குக் கிடைத்திருக்கின்றன. இதைத் தவிர. மங்களூர், குடகு போன்ற இன்றைய கர்நாடகத்தின் பகுதிகளிலும் வட கேரளத்திலும் திப்புவின் வன்முறைக்கு ஆளானவர்கள் விட்டுச் சென்ற தடங்கள் பல இருக்கின்றன. இப்பகுதிகளில் பரம்பரை பரம்பரையாகத் திப்பு செய்த கொடுமைகளைப் பற்றிக் கூறப்படுகிறது. மாறாக, மைசூரைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் திப்புவின் நல்லாட்சியைப் புகழ்ந்து மக்கள் காலம் காலமாகப் பேசிக் கொண்டு வந்திருக்கிறார்கள். இரண்டையும் ஒதுக்கித் தள்ள முடியாது.
இனி கேள்விகளுக்கு வருவோம்
ஹைதர் அலி எப்படி ஆட்சிக்கு வந்தார்? அவரும் அவரது மகன் திப்புவும் செய்த போர்களின் விவரங்கள் என்ன?
ஹைதர் அலியின் முன்னோர்கள் ஆப்கானிஸ்தானத்திலிருந்தோ பஞ்சாபிலிருந்தோ தெற்கே வந்தவர்கள். இறைத்தூதரின் பழங்குடியான குரேஷி குடியைச் சார்ந்தவன் என்று ஹைதர் அலியே சொல்லிக் கொண்டிருந்ததாக அவரிடம் வேலை செய்த பிரெஞ்சு படைத்தலைவர் எழுதியிருக்கிறார். ஹைதர் படைத்தலைவராகச் சேர்ந்து சுல்தானாக மாறியது பெரிய கதை. 1761லிருந்து 1782ம் ஆண்டு மறையும் வரை அவர் தனது அரசின் எல்லைகளை விரிவாக்குவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர் பிரித்தானியரோடு புரிந்த முதல் மைசூர்போரில் (1767-69) வெற்றி பெற்றார் என்றுதான் சொல்ல வேண்டும்.சென்னையையும் கைப்பற்றலாம் என்ற அளவிற்கு அவரது சேனை முன்னேறியது. இரண்டாவது மைசூர் போர் (1780-84) நடக்கும் போது அவர் (1782ல்) இறந்து போனார். பதவிக்கு வந்த அவரது மகன் திப்பு போரைத் தொடர்ந்து நடத்தினார். இந்தப் போர் வெற்றி-தோல்வி இல்லாமல் முடிந்தது என்று சொல்லலாம். வெள்ளைகாரர்கள் மயிரிழையில் தோல்வியிலிருந்து தப்பித்தனர். திப்பு ஆயிரக் கணக்கான சிப்பாய்களைச் சிறைபிடித்தார். மூன்றாவது மைசூர் போர் (1789-92)திப்புவின் படுதோல்வியில் முடிந்தது. இதில் பிரித்தானியர்கள் நிஜாம் மற்றும் மராட்டியரோடு கூட்டுச் சேர்ந்து போரிட்டனர். திப்பு தனது அரசின் பெரும்பகுதியை இழந்தார். நான்காவது மைசூர் போர் (1799) திப்புவின் மரணத்தில் முடிந்தது.
திப்புவின் இந்துக்களையும் கிறித்துவர்களையும் கொடுமைப் படுத்தினாரா?
நிச்சயமாக. ஆனால் அதை அவர் மைசூர் பகுதியில் செய்யவில்லை. மைசூர் பகுதியில் இருந்தவர்கள் அவரது காலத்தில் 90% சதவீதத்தினர் இந்துக்கள் என்பதை நாம நினைவில் கொள்ள வேண்டும். மூன்றாவது மைசூர் போரைப் பற்றி எழுதியிருக்கும் மேஜர் டிரோம் என்ற ஆங்கிலேயர் அந்தப் பகுதியின் செழிப்பைப் பற்றியும் அங்கு இருக்கும் மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பதைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். திப்புவிற்கு பின் வந்த உடையார் ஆட்சியில் வரி
அதிகமாக இருப்பதாகவும் திப்புவின் காலத்தில் தாங்கள் மிகவும் நிம்மதியாக இருந்ததாகவும் விவசாயிகள் சொன்னதை ஜானகி நாயர் தனது சமீபத்தியக் கட்டுரை ஒன்றில் எழுதியிருக்கிறார். அவரது ஆட்சியின் கீழ் இருந்த கோவில்களின் வருமானம் அனைத்தையும் திப்பு எடுத்துக் கொண்டார் என்றும் அவர் உயிரோடு இருக்கும் வரை அவர் அரசாண்ட பகுதியில் இரண்டே கோவில்களில் மட்டும் பூஜைகள் நடந்த்து என்று ரைஸ் என்ற ஆங்கிலேயர் எழுதுகிறார். இது எந்த அளவில் உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் அவர் படை எடுத்து இடங்களில் செய்தது போல மைசூர் பகுதியில் அவர் கோவில்களை இடித்ததாகத் தெரியவில்லை. மூன்றே கோவில்கள் மட்டும் இடிக்கப்பட்டதற்கான சான்றுகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்த வராகசுவாமி கோவில். தனது
குடையின் மிக அருகாமையில் வராக வழிபாட்டை அவர் விரும்பாமல் இருந்திருக்கலாம். திப்பு வட கேரளத்தில் நடத்திய படுகொலைகளைப் பற்றியும் அங்கு அவர் நட்த்திய கட்டாய மதமாற்றத்தைப் பற்றியும் பல பதிவுகள் இருக்கின்றன. பார்த்தலோமியோ என்ற போர்த்துகீசிய பாதிரி அதைப் பற்றி எழுதியிருக்கிறார். கிர்மானி தனது புத்தகத்தில் கிராமங்களும் நகரங்களும் தீ வைத்து அழிக்கப்பட்டதைப் பற்றி எழுதுகிறார். திப்புவின் படையில் பல படைவீர்ர்கள் கூலிக்கு வேலை செய்தவர்கள். சில வேளைகளில் அவர்களைக் கட்டுப்படுத்த முடிந்தாலும், மொத்தத்தில் அவர்களை ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்க முடியாது. இருந்தாலும் திப்புவே இந்துக்களைக் கொல்லுங்கள் என்று ஆணையிட்டது உண்மை. 14 டிசம்பர் 1788ல் தனது படைத்தலைவருக்கு எழுதிய கடிதத்தில் சொல்கிறார்: இருபது வயதிற்கு கீழே உள்ளவர்களைச் சிறைபிடியுங்கள். மற்றவர்களில் 5000 பேர்களை தூக்கிலிட்டு கொல்லுங்கள்.” திப்புவே ஜனவரி 18 1790 எழுதிய கடித்த்தில் குறிப்பிடுகிறார்: “அல்லாவின் கருணையால், கள்ளிக்கோட்டையில் இருந்த அனைவரையும் மதமாற்றம் செய்து விட்டேன்.” 19 ஜனவரி 1790 எழுதிய கடிதத்தில் “நான் கள்ளிக்கோட்டையில் பெரு வெற்றி அடைந்ததும் அங்கு நான்கு லட்சம் இந்துக்களை மதமாற்றம் செய்ததும் உங்களுக்குத் தெரியாதா?” என்று சொல்கிறார். மங்களூர் கிறித்துவர்களுக்கு அவர் செய்த கொடுமைகளைப் பற்றியும் பல பதிவுகள் இருக்கின்றன. ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருக்கும் மசூதியில் இருக்கும் 1867ல் வடிக்கப்பட்ட பாரசீக மொழிக் கல்வெட்டு இறைத்தூதர் பானு குரைஸா என்ற யூதப் பழங்குடியோடு நடத்திய போரைப் பற்றியும், அதில் எப்படி ஆண்கள் கொல்லப்பட்டார்கள், பெண்களும்
குழந்தைகளும் அடைமைப்படுத்தப் பட்டார்கள் என்பதைக் குறிப்பிடுகிறது. அதே சமயத்தில் மங்களூரிலிருந்து 60000 கிறித்துவர்களை அவர் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் சிறையில் வைத்திருந்தார். 20000க்கும் குறைவானவரே சிறையிலிருந்து 15 வருடங்களுக்குப் பிறகு வெளியில் வந்தனர். 27 சர்ச்சுகள் அடியோடு அழிக்கப்பட்டன.
ஆனால் இந்தியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆண்ட அனைவரும் கிட்டத்தட்ட
திப்புவைப் போலவே நடந்து கொண்டனர். உதாரணமாக மராட்டிய படை என்றாலே
இந்தியா முழுவதும் மக்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. மராட்டிய படையினரின் பின்னால் பிண்டாரிகள் என்ற துணைப்படையினர் வரும் வழக்கம் இருந்தது. பிண்டாரிப் படைகளுக்குத் தலைமை தாங்கியவர் இஸ்லாமியராக இருந்தாலும் படையில் இந்துக்களும் இருந்தார்கள். கிராமங்களை முழுவதும் கொளுத்துவதில் வல்லவர்கள். ஒன்று விடாமல் எல்லாவற்றையும் சுரண்டி எடுத்துச் செல்வதில் அவர்களுக்கு இணை யாரும் கிடையாது.பிண்டாரிகள் வருகிறார்கள் என்ற வதந்தி வந்ததுமே கிராம மக்களே தங்கள் கிராமத்தில் சில வீடுகளுக்கு தீ வைத்து விடுவார்களாம். நெருப்பு எரிவதை தூரத்திலிருந்து பார்க்கும் பிண்டாரி சேனை நமக்கு முன்னால் காரியம் நடந்து விட்டது என்று கிராமத்தை விட்டுச் சென்றால் மற்ற வீடுகளாவது மிஞ்சும் என்ற நம்பிக்கையில். மராட்டியர்கள் யாரையும் மதமாற்றம் செய்யவில்லை என்பது உண்மை. ஆனால் அன்றைய காலகட்டத்தில் ஒருவர் பிறப்பினால்தான் இந்துவாக ஆக முடியும். இடையில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டவர்களைக் கூட அன்றைய இந்துக்கள் திரும்பச் சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை என்பதும் உண்மை.
குடகு நாட்டிற்கும் மண்டயம் ஐயங்கார்களுக்கு திப்பு கொடுமை இழைத்தாரா?
குடகு நாட்டில் திப்பு இழைத்த கொடுமைகளைப் பற்றி கிர்மானி தனது நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். குடகு நாட்டுப் பெண்களுடன் திப்புவின் தளபதி தவறாக நடந்து கொண்டதால் ஏற்பட்ட மக்களின் எழுச்சியை அடக்க திப்பு படையெடுத்தார் என்று அவர் சொல்கிறார். திப்பு தனது கடிதம் ஒன்றில் 40000 பேர்களைச் சிறைபிடித்ததாகச் சொன்னாலும் கிர்மானி 8000 பேர்களைச் சிறைபிடித்தார் என்கிறார். குடகுநாட்டுப் பெண்கள் மிக அழகானவர்கள் என்று சொல்லும் அவர், பெண்களில் பலரை திப்பு தனது போர்வீர்ர்களுக்குப் கொடுத்து விட்டார் என்கிறார்.
மேல்கோட்டை மண்டயம் ஐயங்கார்களுக்கு நடந்தவற்றை பற்றி வாய்வழிச் செய்தி நமக்குக் கிடைத்திருக்கிறது. எனவே அதன் நம்பகத் தன்மை குறைவு. உடையார் அரச பரம்பரையோடு சேர்ந்து அவர்கள் சதி செய்கிறார்கள் என்று திப்புவிற்கு சந்தேகம் ஏற்பட்டதால் பாரத்வாஜ
கோத்திரத்தைச் சார்ந்த 700 ஐயங்கார்களை திப்பு கொன்றார் என்பது வாய்வழிச் செய்தி. இந்தச் சம்பவம் தீபாவளி அன்று நடந்ததாகச் சொல்லப்படுவதால், இன்றும் மேல்கோட்டை மண்டயம் ஐயங்கார்கள் தீபாவளி கொண்டாடுவது இல்லை.
திப்புவிற்கு சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கும் கடிதத் தொடர்பு இருந்ததா?
திப்பு சிருங்கேரி மடாதிபதியாக இருந்த மூன்றாம் சச்சிதானந்த பாரதி சுவாமிகளுக்கு 29 கடிதங்கள் கன்னடத்தில் எழுதியிருக்கிறார். மராட்டியப் படைகள் சிருங்கேரி மடத்திற்கு பெரும் சேதம் விளைவித்ததைக் கண்டித்து ‘இது போன்ற தவறுகளைச் செய்பவர்கள் பின்னால் பெருவிளைவுகளைச் சந்திப்பார்கள். குருவிற்கு துன்பம் செய்தால் பின்னால் அவர்கள் குடும்பங்கள் துன்பங்களை அனுபவிக்கும்’ என்று ஒரு கடிதம் பேசுகிறது. இன்னொரு கடிதத்தில் “எனது மூன்று வலுக்கள் இவை: கடவுள் நம்பிக்கை, சிருங்கேரி சுவாமியின் அருள், எனது படைகளின் திறன்’ என்று எழுதுகிறார். மற்றொரு கடிதத்தில் சுவாமியை யாகங்கள் நடத்தும்படி கோரிக்கை விடுக்கும் திப்பு அடுத்த கடிதத்தில் யாகங்களின் பலனாக தான் நினைத்த்து நிறைவேறி விட்டது என்றும் நன்றாக மழை பெய்கிறது என்றும் எழுதியிருக்கிறார். ஆனால் திப்புவின் எதிரிகளும் சிருங்கேரி மடத்தின் மீது பெருமதிப்பு வைத்திருந்தனர். ஹைதராபாத் நிஜாம் மடத்திற்கு பல சலுகைகளை அளித்திருக்கிறார். பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ் எல்லாப் பூஜைகளிலும் முதல் மரியாதை சிருங்கேரி சாரதா பீடத்திற்குச் செய்யவேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். தன்னை மடத்தின் சீடனாக அறிவித்துக் கொண்டார்.
எனவே அன்றைய அரசர்கள் அனைவரும் மதகுருக்களை மதிப்போடு நட்த்தினார்கள் என்பது
தெளிவு.
திப்பு சிருங்கேரி மடாதிபதிக்கு ஏன் கடிதங்கள் எழுதினார்?
அவருக்கு ஜோசியத்தில் பலத்த நம்பிக்கை இருந்தது பல ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.ஸ்ரீரங்கபட்டினத்தில் இருந்த ரங்கநாதர் கோவிலைச் சார்ந்த பிராமணர்களைக் கேட்டுக் கொண்டு நல்ல நேரம் பார்த்துத்தான் எந்தக் காரியத்தையும் அவர் செய்வார் என்றும் சொல்லப்படுகிறது. அவருடைய முக்கியமான அதிகாரிகளில் பலர் இந்துக்கள். அவர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த பூர்ணையா இந்து. மேலும் திப்பு சாரதாபீடத்தின் அதிபதிக்கு எழுதிய கடிதங்கள் அனேகமாக அனைத்தும் அவர் எதிரிகளால் நெருக்கப்பட்ட பிறகு எழுதப்பட்டவை. நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் நாம் சாதாரணமாக என்ன செய்வோமோஅதையே திப்புவும் செய்தார் என்று கூறலாம்.
அவர் துருக்கி சுல்தானுக்கும் ஆப்கானிய அமீருக்கும் எழுதிய கடிதங்கள் என்ன
சொல்கின்றன?
திப்பு இவர்களுக்கு எழுதிய கடிதங்களில் இஸ்லாமின் வாள் வெற்றியடைய வேண்டும்
என்பதும் ‘நம்பாதவர்கள்” தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகின்றன என்ற கூற்று உண்மை. ஆனால் இவற்றிற்கு பின்னால் வலுவான அரசியல் காரணங்கள்இருக்கின்றன. முன் கூறியது போல திப்பு எதிரிகளால் நெருக்கப்பட்டவர். அவர் தனக்குத் தேவையான எல்லா உதவிகளையும் நாடுவது என்பது இயற்கை. இந்தக் கடிதங்கள் திப்புதான் முழுவதும் அழிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் எழுதப்பட்டவை என்பதும் வெளிப்படை.
திப்பு முகலாயப் பேரரசு மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நிச்சயம் புரிந்து கொண்டிருந்தார். அதற்குப் பின்னால் இந்தியாவின் ஒரு பகுதியையாவது சுதந்திரமாக ஆள வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்திருக்கலாம். அவர் தனது நாணயங்களில் முகலாய அரசின் ஆட்சிக்கு கீழ் இருப்பவர் என்ற வாசகத்தையே எடுத்து விட்டார். 1787ம் ஆண்டு மராட்டியர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தபோது, அவர் தன்னை அவர்கள் பாதுஷா என்று அழைக்க வேண்டும் என்று விரும்பினார். மராட்டியர் அவ்வாறு அழைக்க
மறுத்தனர். கடைசியாக திப்பு ‘நவாப் திப்பு சுல்தான் பதே அலி கான்”
என்று அழைக்கப்பட்டார். அவர் தான் உண்மையான அரசர்தான், மழையில் முளைத்த காளான் அல்ல என்பதை நிறுவ பெரிதளவும் முயன்றார். ஆனால் அவரைச் சுற்றியிருந்த அரசுகள் அவரை உண்மையான அரசர் என்று ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஹைதராபாத் நிஜாமிற்கு எழுதும் போதும்திப்பு “நாம் இருவரும் இஸ்லாமியர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்’ என்று
சொல்கிறார். தனது மகனுக்கு அவரது மகளைத் திருமணம் செய்யவும் முயன்றார். ஆனால்‘வேலைக்காரன் வம்சத்தில் வந்தவர்’ என்ற காரணத்தில் திப்புவின் மகன் நிராகரிக்கப்பட்டார் என்று டால்ரிம்பிள் தனது புத்தகத்தில் சொல்கிறார்.
அவர் பிரெஞ்சு அரசின் உதவியைக் கேட்டாரா?
எதிரியின் எதிரி தனது நண்பன் என்ற கொள்கை அன்றைய அரசர்கள் அனைவராலும்
கடைபிடிக்கப்பட்டு வந்தது. அக்கொள்கையில் பொதிந்திருக்கும் அபாயத்தையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். திப்புவிற்கு பிரெஞ்சுக்காரர்கள் பிரித்தானியர்களுக்கு எதிரிகள் என்பது நிச்சயமாகத் தெரியும். எனவே அவர் பிரெஞ்சு அரசின் உதவியை நாடியதில் எந்த வியப்பும் இல்லை. அவர்களுக்கு 1797ம் ஆண்டுஅனுப்பிய வரைவு உடன்படிக்கையில் இந்தியாவில் பிரித்தானியர் கீழ் இருக்கும் பகுதிகளை நாம் இருவரும் பாதி பாதியாகப் பிரித்துக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பிடுகிறார். அவருக்கு இது நடக்கவே முடியாதது என்பது நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனாலும் பிரெஞ்சுப் படையை இந்தியா பக்கம் திருப்ப என்ன வேண்டுமானாலும் அவர் செய்யத் தயாராக இருந்தார். பிரெஞ்சுப் புரட்சியின் அடிப்படைக் கொள்கைகளான சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் போன்றவற்றில் அவருக்கு நம்பிக்கை இருந்த்து என்று சொல்ல முடியாது. அவர் இந்தியாவில் இருக்கும் மற்ற அரசர்களைப் போலவே ‘முழு அரசராக’ இருக்க விரும்பினார். அவருக்கு இந்தச் சொற்களின் பொருள் தெரிந்திருக்கும் வாய்ப்புகள் குறைவு. தன்னை சிடிசன் திப்பு என்று அழைத்துக் கொள்ளச் சம்மதித்தார் என்றால் அதற்கு அரசியல் காரணத்தைத் தவிர வேறு எந்தக் காரணமும் இருக்க முடியாது. ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்த பிரெஞ்சுக்கார்ர்கள் எடுத்த உறுதிமொழி விசித்திரமானது! “நாங்கள் எல்லா அரசர்களையும் வெறுக்கிறோம், பிரஞ்சு குடியரசோடு கூட்டுச் சேர்ந்திருக்கும் திப்பு சுல்தானைத் தவிர.” என்ற அந்த உறுதிமொழி பிரெஞ்சு குடியரசு அமைந்த அடிப்படைக்கே எதிராக இருக்கிறது. எனவே இது அரசியல் விளையாட்டில் ஒரு பகுதி என்பது தெளிவு.
திப்பு புதுமை விரும்பியா?
நிச்சயமாக. அவருக்கு புதிதாக இருக்கும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் ஆர்வம்இருந்தது. பொருளாதாரத்திலும், ராணுவ முறைகளிலும் அவர் புதுமையை விரும்பினார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. பட்டுத் தொழிலை கர்நாடகத்திற்கு அவர்தான் கொண்டு வந்தார்.
மற்றைய அரசர்களிடமிருந்து அவர் வேறுபட்டவரா?
நிச்சயமாக. பிரித்தானியர்கள் இந்தியா முழுவதையும் ஆள வேண்டும் என்ற எண்ணம்கொண்டவர்கள் என்பதைத் துல்லியமாகக் கணித்தவர் திப்பு சுல்தான். அவர்களுக்கு எதிராக என்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் அவர் கடைசிவரையில் செய்து கொண்டிருந்தார். அவர்களை எதிர்த்து தனது உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தார். போர்க்களத்தில் இறந்த மிகச் சில இந்திய மன்னர்களில் திப்பு ஒருவர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
திப்பு மதச்சார்பற்றவரா?
நிச்சயமாக இல்லை. மதச்சார்பில்லாமல் மனிதன் வாழ முடியும் என்பதே அவருக்குத்
தெரிந்திருக்க முடியாது. பிரெஞ்சுக்காரர்களுடன் அவர் நடத்தியவைகளை சடங்குகளாக மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும். அவர் இஸ்லாம் மீது அடிப்படை நம்பிக்கை வைத்திருந்தார். கிர்மானி கூட தனது புத்தகத்தில் அவர் மற்றைய மதங்களை வெறுத்தார் என்று தெளிவாகக் கூறுகிறார். தகுதியே இல்லாதவர்களை அவர்கள் இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்திற்காக பெரிய பதவிகளில் நியமித்தார் என்றும் அவர் சொல்கிறார். திப்பு மற்றைய மதங்கள் மீது கொண்டிருந்த அவநம்பிக்கை தனிப்பட்ட முறையிலானது. இஸ்லாம் உலக முழுவதும் பரவ வேண்டும் என்று அவர் ஒரு இஸ்லாமியர் என்ற முறையில் விரும்பினார்
என்பதில் ஐயம் இல்லை. ஆனால் ஓர் அரசர் என்ற முறையில் இஸ்லாமை வலுக்கட்டாயமாக திணிப்பதில் உள்ள அபாயங்களை அவர் நன்கு அறிந்திருந்தார். கட்டாய மதமாற்றம் என்பது ஒரு அரசியல் உத்தியாகப் பயன்படுத்தப் பட்டது என்பதில் ஓரளவு உண்மை இருக்கிறது. ஆனால் மாற்றப்பட்டவர்களுக்கு அது தங்கள் மீது செலுத்தப்பட்ட கொடுமையான ஆயுதமாக இருந்தது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் திப்பு நவீன காலம் தொடங்குவதற்கு இருந்த ஒரு மன்னர். அவர் மீது நவீன காலக் கூறுகளைத் திணிப்பதும் ஒரு வன்முறைதான். அவர் மீது இஸ்லாமிய வெறியர் என்றபட்டத்தைத் திணிப்பது போன்றது.