நேற்று சமஸ்கிருதத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களையும் தமிழைத் தூக்கிப் பிடிப்பவர்களையும் பற்றி எழுதியிருந்தேன். இம்முரண் தமிழ்ச் சமுதாயத்தில் குறிப்பாக தமிழ் பிராமணர்கள் மத்தியில் பல நூற்றாண்டுகளாக இருந்திருக்க வேண்டும். சங்க காலத்திலிருந்தே இருந்திருக்கலாம். தமிழின் மிகப் பெரிய புலவர்களில் பிராமணர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக் கூடாது. அதே சமயத்தில் தமிழகத்திலிருந்து வந்திருக்கும் சமஸ்கிருத நூல்களும் கணக்கிலடங்காதவை. வைணவ சித்தாந்தத்தில் தமிழும் சமஸ்கிருதமும் இணைந்தும், எதிர்பட்டும் இயங்கியது போல, சைவ சித்தாந்தத்திலும் அது நடந்திருக்கிறது.
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’” என்பது திருமந்திரம். இது நம்மாழ்வாரின் “என்னைத் தன்னாக்கி த்ன்னால் என்னை இன்றமிழ் பாடிய ஈசன்” என்ற பாசுரத்தோடு ஒத்துப் போகிறது.
தமிழில் மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்த சிவாச்சாரியார், உமாபதி சிவாச்சாரியார் என்ற நால்வரும் திருக்கயிலாயப் பரம்பரைச் சந்தானக் குரவர் என்று அறியப்படுகிறார்கள். இப்பரம்பரையின் முதல்வர் கைலாயபதியாகிய திருநீலகண்ட பரமசிவன்!
நம்மாழ்வாரைப் போலவே மெய்கண்ட தேவரும் குரவர்களில் முதல்வராக அறியப்படுகிறார். நம்மாழ்வாரைப் போலவே அவரும் பிராமணர் அல்லாதவர்.
சமஸ்கிருதத்தில் இருக்கும் 28 சைவ சித்தாந்த ஆகமங்களைப் போலவே தமிழிலும் 14 சித்தாந்த சாத்திரங்கள் வகுக்கப்பட்டன. தமிழ் சாத்திரங்கள் சமஸ்கிருத ஆகமங்களோடு சில சமயங்களில் ஒத்துப் போகின்றன. சில சமயங்களில் விமரிசனமும் செய்கின்றன. கோவில்களில் கடைபிடிக்கப்படும் ஆகமவிதிகளை கண்டு கொள்ளாதவை சித்தாந்த சாத்திரங்கள். நாயனமார்களின் பெருமையை உமாபதி சிவாச்சாரியார் எழுதிய திருமுறைகணட புராணமும் சேக்கிழார் புராணமும் பேசுகின்றன.
இது திருமுறைகண்ட புராணத்தில் ஒரு பகுதி. மூவர் கதை சுருக்கமாகச் சொல்லப்படுகிறது:
சேடர்மலி காழிநகர் வேந்தர் தாமும்
தேவர்புகழ் திருத்தோணிச் சிவனார்பங்கில்
பீடுடைய உமைமுலைப்பால் அருளால்உண்டு
பிஞ்ஞகனைச் சினவிடைமேல் பெருகக்கண்டு
தோடுடைய செவியன்முதல் கல்லூர் என்னும்
தொடைமுடிவாப் பரசமயத் தொகைகள் மாளப்
பாடினார் பதிகங்கள் பாவில் ஒன்றாம்
பதினாறாயிரம் உளதாப் பகருமன்றே
திருநாவுக் கரையரெனும் செம்மையாளர்
தீஅமணர் சிறைநீங்க அதிகை மேவும்
குருநாமப் பரஞ்சுடரைப் பரவிச் சூலைகொடுங்
கூற்றாயின என்ன எடுத்துக் கோதில்
ஒருமானத் தரிக்கும் ஒரவரையுங் காறும்
நாற்பத்தொன் பதினாயிர மதாக
பெருநாமப் புகலூரிற் பதிகங்கள் கூறிப்
பிஞ்ஞகனார் அடியிணைகள் பெற்றுளாரே
பின்புசில நாளின்கண் ஆரூர்நம்பி பிறங்குதிரு
வெண்ணெய்நல்லூர்ப் பித்தா என்னும்
இன்பமுதல் திருப்பதிகம் ஊழிதோறும்
ஈறாய்முப்பத் தெண்ணாயிரமதாக
முன்பு புகன்றவர் நொடித்தான் மலையிற்
சேர்ந்தார் முறைகளெல்லாந் திருத்தில்லை மூதூர் தன்னில்
அன்றவர்கை இலச்சினையால் வைத்தார்
மன்ன ஆராய்ந்து தருக என அருளிச் செய்தார்…
நாயன்மார்கள் எல்லாச்சாதிகளிலிருந்தும் வந்தவர்கள் என்பதை சேக்கிழார் புராணத்தின் இப்பாடல் சொல்கிறது:
திருமறையோர் புராணமவை பதின்மூன்று சிவவே தியர்அரனை வழிபட்ட புராணமோ ரிரண்டு
குரைகழல்மா மாத்திர ரொன்று அறுவர்முடி மன்னர்குறு நிலமன்னவர் ஐவர்வணிகர் குலத்தைவர்
இருமைநெறி வேளாளர் பதின் மூவரிடையரிருவர் இருவர்சா லியர்குயவர் தயிலவினை யாளர்
பரதவர்சான் றார்வண்ணார் சிலைமறவர் நீசர் பாணரிவர் ஓரொருவ ராம்பகருங் காலே 3