ஆசார்ய ஹ்ருதயம்

ஆசார்ய ஹ்ருதயம் என்று ஒரு நூல் இருக்கிறது. அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்ற பெரியவர் எழுதியது. இதற்கு மணவாள மாமுனிகள் வியாக்கியானம் எழுதியிருக்கிறார். அண்ணங்கராசாரியார் சுவாமியும் பதவுரை எழுதியிருக்கிறார்.
இந்நூல் ஏன் எழுதப்பட்டது? ஆழ்வார்களின் பெருமையை நிறுவுவதற்காக. தமிழில் எழுதிய பாடல்களை, குறிப்பாக நம்மாழ்வார் எழுதிய பாசுரங்களை எவ்வாறு ஆதாரமாக ஏற்றுக் கொள்வது என்ற கேள்விக்கு, வைதிகப் பிராமணர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக.

“ஆக மூர்த்தியில் பண்ணிய தமிழானவாறே வேதத்தை த்ராவிடமாக்ச் செய்தார் என்னும்”

யாக மூர்த்தியான இறைவனே உறுதியெடுத்துக் கொண்டு பக்தர்களுக்கு எளிமையாக தன்னையே தமிழாக்கிக் கொண்டு (என்னைத் தன்னாக்கி தன்னால் என்னை இன்றமிழ் பாடிய ஈசன் – நம்மாழ்வார்) வேதங்களைத் திராவிட மொழியாகிய தமிழில் தந்தான் என்று பொருள் கொள்ளலாம்.

“மண்ணாடின ஸஹ்யஜலம் தோதவத்திச் சங்கணி துறையிலே துகில்வண்ணத்தெண்ணீராய் அந்தஸ்ஸ்தத்தைக் காட்டுமா போலே அல்பச்ருதர்கலக்கினச்ருதி நன் ஞானத்துறை சேர்ந்து தெளிவுற்று ஆழ்பொருளையறிவித்தது.”

மலையில் பிறந்து மண்ணடர்ந்த நதி நீர் ஆழ்வார் திருநகரி சங்கணித் துறையில் தெள்ளியதாகிறது. அதே போல சிற்றறிவாளர் உரை சொல்கிறோம் என்ற பெயரில் கலக்கிய வேதங்கள் சடகோபனுடைய பாடல்களால் கலக்கம் தீர்ந்து தெளிவடைந்து ஆழ்பொருளைக் காட்டின.

“ம்ருதகடம் போலன்றே பொற்குடம்”

வடமொழி வேதங்கள் மற்றவர் தொட்டால் தீட்டாகிப் போகின்ற மண்குடம் போன்றவை. திவ்யப்பிரபந்தாம் எல்லோராலும் தொடக் கூடிய பொற்குடம்.

இவை போன்று சூர்ணைகள் என்று சொல்லக்கூடிய பல வாக்குகள் ஆசார்ய ஹ்ருதயத்தில் உள்ளன.
படித்தாலே வடமொழிக்கு மட்டும் ஏற்றம் கற்பிப்பவர்களை எதிர்த்து எழுதப்பட்டது என்பது விளங்கும். ‘

வடமொழிமறையென்றது தென்மொழி மறையை நினைத்திறே’ என்கிறது ஒரு வாக்கு

‘செந்திறத்தமிழென்கையாலே ஆகஸ்த்யமுமநாதி’ என்கிறது இன்னொரு வாக்கு.

அகத்தியரால் அருளப் பெற்ற தமிழ் மொழியும் வட மொழி போலவே அநாதியானது, அதாவது எவ்வளவு மூத்தது என்பதைக் கண்டு பிடிக்க முடியாதது என்பது பொருள்.

‘செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி’ என்ற ஆழ்வார் பாசுரத்திலிருந்து’செந்திறத்தமிழ்’ எடுக்கப்பட்டது. பாசுரத்திற்கு உரை எழுதிய அண்ணங்கராசாரியார் ‘சமஸ்கிருத வேதத்திலும் தமிழ் வேதம் மிகச் சிறந்தது என்பது விளங்க முந்துறச் சொல்லிற்றென்க’ என்கிறார்.

ஏன் மறுபடியும் மறுபடியும் தமிழின் ஏற்றம் கூறப்படுகிறது? காரணம் எளிதானது. அன்றைய பிராமணர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழின் பெருமையை ஏற்றுக் கொள்ளத்தயங்கியதால்தான். இல்லையென்றால் இது போன்ற நூலுக்கு அவசியமே இல்லை.

3 thoughts on “ஆசார்ய ஹ்ருதயம்”

 1. வைணவம் என்பது சாதியின்றி அனைவரையும் ஏற்றுக்கொண்ட ஒன்று என்ற ஆழ்வார்களின் வாக்கு சிறக்கவும், ஆழ்வாரின் பாடல்களின் உட்பொருளை ஒன்றுமறியாத எளியவர்கள் உணர்ந்துகொள்ளவுமே , ஆச்சார்ய ஹ்ருதயம் எழுதப்பட்டது என்கிறது, நாயனாரை ஏத்திப்பாடும் தனியன் ஒன்று.
  “ பணவாள் அரவணைப்பள்ளி பயில்பவர்க்கு எவ்வுயிரும்
  குணபோகம் என குருகைக்கதிபன் உரைத்ததுய்ய
  உணர்பாவின் நுட்பொருளை ஒன்றுமறியா உலகறிய
  மணவாளன் மாறன் மனமுரைத்தான் வண்முடும்பை வந்தே//

  வேதத்தின் வழி நடக்க மிகக்கடுமையான ஆசாரங்களை மேற்கொள்ளும் பிராமணத்துவத்தைப் போல் உயர்ந்த ஒன்று, ஆழ்வாரின் ஆயிரம் பாசுரங்களை அறியக் கற்ற வல்லமை என்கிறது ஆச்சார்ய ஹ்ருதயம். சாதி அடுக்குகளில் சிறந்ததெனக் கருதப்படுவதை, ஒரே சாதியாக வைண்வனாக இருப்பதுடன் ஒப்பிட்டுச் சொல்ல அந்தக் காலத்தில் மிகத் துணிச்சலும், எதிர்கொள்ளும் கூரிய அறிவாற்றலும் வேண்டியிருந்திருக்கும். அவற்றை ஒருங்கப்பெற்றவர் நாயனார் .

  Like

 2. “அன்றைய பிராமணர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழின் பெருமையை ஏற்றுக் கொள்ளத்தயங்கியதால்தான். இல்லையென்றால் இது போன்ற நூலுக்கு அவசியமே இல்லை.”
  இது எந்த வித தரவுமில்லாமல் நீங்களாக இட்டுக் கட்டியது என்பது எனது தாழ்மையான கருத்து .
  பிராமணர்களில் பெரும்பாலோர் தமிழையும், வடமொழியையும் சமமாகத் தான் பாவித்தார்கள். இதற்கு சான்று வைணவப் பெரியார்கள் தங்கள் பெயருக்கு முன்னால் உ.வே. (உபய வேதாந்த சார்யார்) என்று போட்டுக் கொள்வதை பெருமையாக கருதிய தே.

  Like

 3. /“ம்ருதகடம் போலன்றே பொற்குடம்”/

  இதே உவமையை சிவப்பிரகாச சுவாமிகள் 17ம் நூற்றாண்டில் நால்வர் நான்மணி மாலையில் பயன்படுத்துகிறார்:

  வாசகன் புகன்ற மதுர வாசகம், யாவரும் ஒதும் இயற்கைத் தாதலின், பொற்கலம் நிகர்க்கும்; பூசுரர் நான்மறை மட்கலம் நிகர்க்கும்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s