எதைப் பற்றியும் எந்தப் புரிதல்களும் இல்லாதவர்கள் தங்களை மார்க்சியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் விந்தை தமிழகத்தில் மட்டும்தான் நடக்கும். பக்தி இலக்கியத்தில் இயற்கையைப் பற்றி அதிகம் பேசப்படவில்லை, கடவுளைப் பற்றித்தான் பேசப்படுகிறது என்று திரு சு வெங்கடேசன் (நாடாளுமன்ற உறுப்பினர்) பிதற்றியிருக்கிறார். அதனால்தான் இப்போது நீர் வரட்சி இருக்கிறதாம். அவர் சொன்னது இது: This cherished, celebrated bond between human beings and nature was lost when Bhakthi literature took over, says Venkatesan. “In Bhakthi, it was replaced by god. For the next thousand years, there was hardly any mention about nature in Tamil literature.” The price of which we seem to be paying now.
“The News Minute , dated 03 July 2019 – article by Kavitha Muralidharan
எந்த நிலவுடமைச் சமுதாயமும் இயற்கையிலிருந்து ஒதுங்கி வாழ முடியாது, இயற்கையோடு இயைந்தே வாழ வேண்டும் என்பது அடிப்படை மார்க்சியம். இயற்கையோடு இன்று விளையாடுவது போல அன்று விளையாடுவதற்குத் தேவையான தொழில் நுட்பமும் இல்லை. தமிழகத்தில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் இதே நிலைமைதான். இயற்கையோடு விளையாடினால் தண்டனை உடனே கிடைத்து விடும் என்று அன்று மக்களுக்குத் தெரிந்திருந்தது. இந்திய மக்களுக்குக் குறிப்பாகத் தெரிந்திருந்தது. எனவே இயற்கையைக் கடவுளாக வழிபடுவதும் கடவுளை இயற்கையாக வழிபடுவதும் காலம் காலமாக நடந்து கொண்டு வந்திருக்கிறது.
பக்தி இயக்கம் வானத்திலிருந்து குதிக்கவில்லை. இங்குதான் நிலவுடமைச் சமுதாயத்தின் ஓர் அங்கமாக இயங்கிக் கொண்டிருந்தது. பக்தி இயக்க காலத்திலும் அதற்குப் பிறகும்தான் தமிழகத்தின் மிகப் பெரிய ஏரிகள் கட்டப்பட்டன. உதாரணமாக சென்னைக்குத் தண்ணீர் வழங்கும் வீராணம் ஏரி சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது.
பக்தி பாடல்களில் இயற்கை ஒதுக்கப்பட்டது என்று சொல்வது தற்குறித்தனம்.
ஆண்டாள், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் போன்றவர்களின் பாசுரங்களின் மீது சிறிதளவாவது பரிச்சயம் இருந்தால்,அப்பரைப் படித்திருந்தால் இது போன்று உளற முடியாது.
இது ஆண்டாள்:
“ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வ னுருவம் போல் மெய் கருத்து
பாழியந் தோளுடை பத்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்”
இறைவன்தான் இயற்கை, இயற்கைதான் இறைவன் என்கிறாள் ஆண்டாள். நம்மாழ்வார் நான் உண்ணும் சோறும் பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் கண்ணன் என்கிறார்.
இதற்கு உந்துதல் எங்கிருந்து கிடைத்தது? சங்க இலக்கியத்திலிருந்துதான்.
மாநிலம் சேவடி ஆகத் தூநீர்
வளைநரல் பெளவம் உடுக்கை ஆக
விசும்புமெய் யாகத் திசைகை ஆகப்
பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று அகத்துஅடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரி யோனே.
இறைவனே இயற்கை என்று இச்சங்கப் பாடல், நற்றிணைப் பாடல், உரத்துக் கூறுகிறது.
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று
உலகே உனக்கு அகல் விளக்கு கடல் விளக்கை எரிக்க உதவும் நெய், விளக்கின் சுடர் கதிரவன் என்கிறார் பொய்கையாழ்வார்.
இது அப்பர் தேவாரம்:
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே
இறைவனின் திருவடி இயற்கை தரும் இன்பத்தைத் தருவது என்கிறார் அப்பர் பெருமான்.
இனி கம்பனுக்கு வருவோம். கம்பராமாயணத்தில் இயற்கையைப் பற்றிப் பேசவில்லை என்று சொல்ல முடியுமா? கம்பனின் ஆற்றுப் படலம் முழுவதும் தண்ணீர் செய்யும் விந்தைகளே பேசப் படுகின்றன.
உதாரணமாக:
முல்லையைக் குறிஞ்சி ஆக்கி.
மருதத்தை முல்லை ஆக்கி
புல்லிய நெய்தல்தன்னைப் பெரு
அரு மருதம் ஆக்கி.
எல்லையில் பொருள்கள் எல்லாம்
இடை தடுமாறும் நீரால்.
செல்லுறு கதியின் செல்லும்வினை
என சென்றது அன்றே.
விதி தடுமாற வைப்பது போல நீரும் நிலை தடுமாற வைக்கிறது என்கிறான் கம்பன்.
இப்பாடலுக்கு முன்னோடி கணியன் பூங்குன்றனாரின் பாடல்.
வானம் தண்துளி தலைஇ ஆனாது.
கல்பொருது இரங்கும் மல்லற் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புனைபோல். ஆருயிர்
முறைவழிப் படூஉம்
சங்க இலக்கியத்திலிருந்து பாரதி வரை ஒரு பிரிக்க முடியாத தொடர்பு இருக்கிறது. இறைவன் சங்க காலம் தொடங்கி தொடர்ந்து பேசப்பட்டு வந்திருக்கிறான். இயற்கையும் பேசப்பட்டு வந்திருக்கிறது.
“காக்கை சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா” இது பாரதி. பறவையும் நீதான், மரங்களும் நீதான் என்கிறான்.
தமிழக மார்க்சியவாதிகள் சங்க காலம் பொற்காலம் என்ற அளவில் பேசுவது மார்க்சியத்திற்கும் வரலாற்றிற்கும் எதிரானது. ஆனால் தமிழக மார்க்சியவாதிகளுக்கு மார்க்சியமும் வரலாறும் தெரிந்திருந்தால்தான் ஆச்சரியம்.
மேற்சொன்ன அனேக மேற்கோள்கள், ‘பக்தி காலகட்டத்தில் இயற்கை, இறைமையாக reduce(!) செய்யப்பட்டதற்கான சான்றுகளாகக் காட்டப்படலாம்.
அதாவது சங்க காலத்தில் இருந்த ‘இயற்கையோடு இயைந்த வாழ்க்கை’யை அதன் பின் காணோம்…என்பது போல.
ஆனால், நீங்கள் கூறியது போல, மிக எளிய பரிச்சயம் இருந்தாலே அவ்வாறும் சொல்ல இயலாது என்பது வெளிப்படை.
பாடலின் பேசுபொருளாக இல்லாமல் ‘வெறும்’ பாடல்பெற்ற ஊரை வருணித்துச் செல்லும் வரிகளே கூட இயற்கையோடு இயைந்து தானே இருக்கும்?!
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குருகூர்
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியா திருவல்லிக்கேணி
வளரிளம்பொழில்சூழ் மாலிருஞ்சோலை (அன்னார் தொகுதி !)
கரண்டம் ஆடு பொய்கையுள் கரும்பனை நெடும்பழம்
புரண்டுவீழ வாளைபாய் குறுங்குடி
(this is so obviously Sangam aesthetics)
இதெல்லாம் கண்ணில் படாமல் பக்தி இலக்கியத்தை உள்வாங்கும் திறமை வாய்ப்பது அரிது.
அதை வைத்துக்கொண்டு sociopolitical extrapolation செய்யும் தன்னம்பிக்கை வாய்ப்பது அதனினும் அரிது.
LikeLike