மனிதன் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டதிலிருந்து மிகச் சமீபக் காலம் வரை மிகச் சிலரே செல்வப் பெருக்கில் மிதந்து கொண்டிருந்தனர். பெரும்பான்மையினருக்குக் கிடைத்தது வறுமை மட்டுமே. எனவே பொற்காலம் என்று ஒன்று இருந்திருந்தால் அது என்றைக்கும் மிகச் சிலருக்காகவே இருந்திருக்க வேண்டும். இது கிரேக்கப் பொற்காலத்திற்கும் பொருந்தும். குப்தப் பொற்காலத்திற்கும் பொருந்தும். நமது சோழர்கள் பொற்காலத்திற்கும் பொருந்தும். எல்லா மனிதர்களுக்கும் எட்டக் கூடிய பொற்காலம், குறைந்த பட்சம் பெரும்பான்மையான மனிதர்கள் ‘இது எங்கள் பொற்காலம்’ என்று சொல்லக்கூடிய காலம், நமக்கு மிக அருகாமையில் இருக்கிறது. ஆனால் இன்றுவரை நமக்குக் கிட்டவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இனி தமிழகத்திற்கு வருவோம்.
தமிழகத்தில் சோழர்கள் வருகைக்கும் முன்னால் நிலைமை எவ்வாறாக இருந்தது?
தமிழகத்தில் நிலவுடைமை, நில உறவுகள் எவ்வாறு இருந்தன என்பதற்குத் தேவையான அடிப்படைச் சான்றுகள் நம்மிடம் அதிகம் இல்லை என்று சொல்லலாம். அதிலும் சோழர்கள் காலத்திற்கு முந்தைய 500 ஆண்டுகளில் நமக்கு கிடைத்திருக்கும் நிலம் சார்ந்த கல்வெட்டுகள் மிகவும் குறைவு. முதல்முதலாக பொதுயுகம் ஐந்தாம் நூற்றாண்டிற்கு பின்னால்தான் நிலம் பற்றிய தகவல்கள் கல்வெட்டுகள் மூலம் கிடைக்கின்றன. சங்ககாலத்தில் பெரும்பாலும் உற்பத்தி உறவுகள் பழங்குடித்தளத்திலேயே இயங்கிக் கொண்டிருந்தன. ஐவகை நிலங்களில் மருதநிலத்தில் மாத்திரம் நிலம் சார்ந்த உற்பத்தி உறவுகள் சொந்தக்குழுக்களிடையே (சாதிசனம் -kinship) இயங்கி வந்தன என்று சொல்லலாம். ஜைனர்களும் பிராமணர்களும் வந்த பிறகுதான் நிலத்தை உழாத நிலவுடைமையாளர், நிலத்தை உழுபவர் என்று அடையாளப்படுத்தத்தக்க இரண்டு குழுக்கள் பிறந்தன. நாலாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை நமக்கு 15 பல்லவ நிலமானியக் கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. அதில் இரண்டு கோவில்களுக்கு 11 பிராமணர்களுக்கு இரண்டு மற்றவர்களுக்கு.எட்டாம் நூற்றாண்டிலிருந்து பிராமணர்களின் வருகை அதிகரிக்கின்றன. மற்றவர்களும் வந்தார்கள்.
ஏன் வந்தார்கள்?
தமிழகத்திற்குள் வந்தவர்கள் பிராமணர்கள் மட்டும் அல்லர். வடுகர்கள், இஸ்லாமியர்கள், கன்னடியர்கள், கேரளத்தைச் சார்ந்தவர்கள், சௌராஷ்டிரர்கள், மராத்தியர்கள் போன்ற பலர் பல ஆண்டுகளாக தமிழகத்தில் குடியேறிக் கொண்டிருந்தனர். இன்று வரை குடியேற்றம் நடந்து கொண்டிருக்கிறது. மறவர், இஸ்லாமியர் போன்றவர்கள் தென்கோடிச்சீமைக்கு குடியேறியதும், நாடார்கள் தென்கோடியிலிருந்து வடக்கே சென்றது நடந்திருக்கிறது.
இவை நடந்ததற்கு காட்டைத் திருத்திக் கழனி ஆக்குவது, வியாபாரம், மதம், பஞ்சம்,போர், போன்ற பல காரணங்கள் இருந்திருக்கின்றன. இன்று தமிழகத்தில் ஒரே ஊரில் இருநூறு ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் குடும்பங்கள் மிகவும்
அரிதாகவே இருக்கும்.
பிராமணர்கள் ஏன் குடியேற அழைக்கப்பட்டார்கள்?
எல்லாக் குடியேற்றங்களுக்கும் பின்னால் வலுவான பொருளாதாரக் காரணங்கள் இருந்திருக்கின்றன. இது பிராமணக் குடியேற்றங்களுக்கும் பொருந்தும். ஒரு பகுதியை விவசாய நிலமாக, உற்பத்தி செய்யும் சாதனங்கள் நிறைந்தவையாக ஆக்க பிராமணர்களின் உதவி நிச்சயம் தேவையாக இருந்திருக்கும். அவர்கள் பருவநிலையைத் துல்லியமாகக் கணிக்கும் பயிற்சியைப் பெற்றிருந்தார்கள். கணிதத்தில் பயிற்சி பெற்றிருந்தார்கள். நிர்வாகத் திறமை அவர்களுக்கு இருப்பதாக அரசர்கள் நம்பினார்கள். அதாவது, பிராமணர்களை ஒரு பகுதியில் குடியேற்றினால், அந்தப் பகுதியில் மிகை உற்பத்தி இருக்கும், வரிகள் விதிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்ததால்தான் அரசர்கள் பிராமணர்களை தொடர்ந்து குடியேற அழைத்தனர். மதமும் தன் பங்களிப்பைச் செய்தது. ஆனால் குறைவாகவே செய்தது. குறைந்தது ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டிருந்த இக்குடியேற்றம் மதக்காரணங்களால் மட்டும் இருக்க முடியாது. அரசர்கள் பார்ப்பன அடிவருடிகள் அல்ல. மாறாக அரசர்களின் அடிவருடிகளாக பிராமணர்கள் இருக்கத் தயாராக இருந்தார்கள். அவர்களைக் குடியேற்றுவதால் அரசர்களுக்கும் ஆதாயங்கள் இருந்தன. மதம் சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த, சமூகம் சார்ந்த ஆதாயங்கள்.
குலமகட்குத் தெய்வம் கொழுனனே மன்ற
புதல்வர்க்குத் தந்தையும் தாயும் – அறவோர்க்(கு)
அடிகளே தெய்வம் அனைவோர்க்கும் தெய்வம்
இலைமுகப் பைம்பூண் இறை”
“திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்”
போன்ற பாடல்கள் உருவாகக் காரணம் அரசர்கள், பிராமணர்கள், வெள்ளாளர்கள் இவர்கள் மூவருக்கு இடையே இருந்த இறுக்கமான உறவு.
நிலவுடைமையாளர்களுக்கு நிலம் சொந்தமாக இருந்ததா?
பத்தாம் நூற்றாண்டு வரை பிராமணர்கள் இல்லாத காவேரிப் பகுதிக் கிராமங்களில் நிலம் கிராமத்திற்குப் பொதுவாகவும் பிராமணர்கள் இருந்த கிராமங்களில் நிலத்தின் உரிமை பிராமணர்களுக்குச் சொந்தமாகவும் இருந்தன என்று சொல்ல ஆதாரங்கள் இருக்கின்றன. பிராமண கிராமங்களை அடுத்து இருக்கும் சிறு கிராமங்களில் (சேரிகள்) வெள்ளாளர்கள், வினைஞர்கள்,வியாபாரிகள், விவசாயத் தொழிலாளர்கள் (தலித்துகள்), பனை தென்னைத் தொழிலாளர்கள், நீர் மடைகளை இயக்குபவர்கள்,தீண்டத்தகாதவர் போன்றவர்கள் வசித்தனர். 50 சதவீதம் விவசாயத் தொழிலாளர்கள் (தலித்துகள்) 17 சதவீதம் வினைஞர்கள், 15 சதவீதம் பனை தென்னைத் தொழிலாளர்கள்.
பதினொன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகு கோவில்களுக்குக் கொடுக்கப்படும் நில மானியங்கள் அதிகரிக்கின்றன.
கோவில்களால் நேர்ந்தவை என்ன?
கோவிலின் செயற்பாடுகளே அதைச் சுற்றியிருக்கும் பகுதியின் பொருளாதாரத்தை இயக்கின. கோவிலில் வேலை செய்பவர்கள், கோவில் நிலங்களில் வேலை செய்பவர்கள், கோவில்களுக்கு தேவையான பொருள்களை அளிப்பவர்கள், கோவில்களுக்கு வருபவர்களுக்காக கடை விரித்திருப்பவர்கள், இவர்கள் அனைவரையும் மேற்பார்வை செய்பவர்கள் போன்ற பலருக்கு வாழ்வாதாரத்தை கோவில் தந்தது. படிநிலைகள் பல ஏற்படவும் கோவில்கள் ஓரளவு காரணமாக இருந்தன என்றும் சொல்லலாம். எந்த சாதிக்கு முதல் மரியாதை போன்றவையே அதன் படிநிலையை பல இடங்களில் நிர்ணயித்தன.
படிநிலைகள் எவ்வாறாக இருந்தன?
பதினொன்றாம் நூற்றாண்டில் சமூகத்தின் படிநிலைகள் இவ்வாறாக இருந்தன.
முதல் அடுக்கில் அரசனும் அவனுடைய அதிகாரிகளும்.
இரண்டாவது அடுக்கில் காணியாளர்கள் எனப்படும் நிலத்திற்குச் சொந்தக்காரர்கள். இவர்களில் பிராமணர்கள்,வெள்ளாளர்கள், படைவீரர்களாக இருந்து நிலவுடைமையாளர்களாக மாறியவர்கள், கோவில் நிலத்தைக் குத்தகை எடுத்தவர்கள்.
இவர்களுக்கு அடுத்த அடுக்கில் வணிகர்களும் வினைஞர்களும் இருந்தார்கள்.
கடைசி அடுக்கில் நிலங்களில் பாடுபடுபவர்கள்.
உழுபவர்களில் சிலரிடம் சிறிதளவு நிலம் இருந்தது. பலரிடம் உழுவதற்குத் தேவையான ஏர், எருதுகள் போன்றவை இருந்தன. நிலவரி விளைச்சலுக்குத் தகுந்தபடியாகவும் அல்லது முன்பே நிர்ணயிக்கப்பட்ட முறையிலேயோ செலுத்த வழியிருந்தது. நிலத்தை சிறிது காலத்திற்கும் மட்டும் குத்தகை எடுத்துப் பயிரிடுபவர்களும் இருந்தார்கள். ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்தே இருவகை வரிகள் இருந்தன. ஒன்று கடமை. மற்றது குடிமை. கடமை விளைச்சலிலிருந்து கொடுக்கப்படும் பங்கு. குடிமை என்பது உடல் உழைப்பால் கொடுக்கப்பட வேண்டிய வரி, சொந்த உடல் உழைப்பு அல்ல. நிலவுடைமையாளர்களிடம் வேலை பார்ப்பவர்களை அரசு ஆணையிடும் வேலைகளை எந்தக் கூலியும் இல்லாமல் செய்வது. வெட்டி என்று அழைக்கப்பட்டது இது போன்ற வேலைகள்தாம். இதற்கு எதிராக பன்னீரண்டாம் நூற்றாண்டில் பல போராட்டங்கள் நடந்திருக்கின்றன. உழுக்குடி மக்கள் உழமாட்டோம் என்று ஏரைத் தொடாமல் இருந்திருக்கிறார்கள்.
தலித் மக்களிடம் நிலம் இருந்ததா?
கல்வெட்டுகளில் இவர்கள் இருந்தார்கள் என்பதே மிகவும் அரிதாகவே தெரியவருகிறது. வரலாற்றால் மறைக்கப்பட்டவர்கள் தலித் மக்கள். ஆங்கிலேயர் வந்த போது மிகப்பெரும்பாலும் நிலமில்லாத, மற்றவர்கள் நிலங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களாகத்தான் அவர்கள் இருந்தார்கள். இந்த நிலைமைதான் ஆங்கிலேயர் வருவதற்கு முன்பும் இருந்திருக்க வேண்டும். அவர்கள் இருக்கும் சேரி கூட கிராமத்திற்குத்தான் சொந்தம். கிராம மக்கள் நினைத்தால் எல்லோரையும் வெளியேற்ற முடியும். மற்றொரு கோணத்தில் பார்த்தால் நீலகண்ட சாஸ்திரி ஆங்கிலத்தில் சொல்வது போல, Workers of this class were in a condition of serfdom, ‘adscripti glebae’ with no freedom of movement. கிட்டத்தட்ட அடிமைகளாகவே இருந்தார்கள் என்கிறார். தென்மாவட்டங்களில் சில தலித்துகளிடம் நிலம் இருந்தது என்பதற்குச் சான்றுகள் இருக்கின்றன. ஆனால் மிகச் சிலரிடம் மட்டும் இருந்திருக்க வேண்டும்.
வலங்கையர் இடங்கையர் போராட்டங்களில் தலித்துகளின் பங்கு என்ன?
வலங்கையர் இடங்கையர் போராட்டங்கள் சோழர்கள் காலத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் ஆண்டுகள் வரையில் நடந்து கொண்டிருந்தன. இவற்றில் பிராமணர்கள் வெள்ளாளர்களைத் தவிர (பெரும்பாலும்) மற்றைய சமூகத்தினர் எல்லோரும் கலந்து கொண்டார்கள். தலித்துகளில் பறையர் வலங்கையர். கைக்கோளர், வன்னிய ஆண்கள், பள்ளர் போன்றவர்கள் இடங்கையர். நகர்புறங்களில் நடந்த இந்தப் போராட்டங்கள் சமூகத்தில் தங்கள் தட்டு என்ன, அதனால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் என்ன என்பவற்றை பற்றியவை. மனிதர்களாகப் பிறந்து விட்டோம், சமூகத்தில் வாழ்கிறோம், சமூகம் குறைந்த பட்ச மரியாதையையாவது தர வேண்டும் என்ற உணர்வின் வெளிப்பாடு இந்தப் போராட்டங்கள் என்று உறுதியோடு சொல்ல இயலாது. ஏனென்றால் இவற்றின் வரலாற்றுச் சிக்கல்கள் இன்று வரை பிரிக்க முடியாதவை. ஆனால் தலித் மக்கள் இப்போராட்டங்கள் நடந்தபோது முன்னிலையில் பல தருணங்களில் நின்று தங்கள் இருத்தலை நிறுவிக் கொண்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. உதாரணமாக 1787ம் ஆண்டு திருவொற்றியூர் கோவில் திருவிழாவின் போது இடங்கையரான குப்புச்செட்டி என்பவரை அவரது பல்லாக்கிலிருந்து இறங்க வைத்து செருப்பில்லாமல் நடக்க வைத்திருக்கின்றனர் வலங்கையரான தலித்துகள் (பறையர்கள்).
ஆங்கிலேயர் வந்த பிறகு நிலைமை மாறியதா?
வாஷ்ப்ரூக் போன்றவர்கள் ஆங்கிலேயர் வருகை தலித் மக்களுக்குப் பொற்காலம் என்கிறார்கள். ராணுவத்திற்கு ஆட்கள் தேவையாக இருந்தது. எல்லாவற்றிற்கு காசு கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம். நகர்ப்புறங்களில் ஆங்கிலேயர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேலை செய்ய ஆட்கள் தேவைப்பட்டார்கள். அதனால் நிலத்தில் வேலை செய்பவர்கள் பலர் நகரங்களுக்குக் குடிபெயர்ந்து விட்டதால், நிலத்தில் வேலை செய்வோர்களின் கூலியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆங்கிலேயர் வருகை பற்றிய வரலாற்றை திரும்ப எழுத வேண்டும் என்று தலித் மக்கள் கோரிக்கை வைப்பதில் நியாயம் இருக்கிறது.
(கட்டுரை எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக மிகவும் எளிமையாக எழுதப் பட்டிருக்கிறது. கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பவை அனைத்திற்கும் தரவுகள் இருக்கின்றன.)
பி ஏ கிருஷ்ணன்