நான் என்னுடைய பணிக்காலத்தில் பணி நிமித்தமாக காஷ்மீரிலிருந்து கன்யாகுமாரி வரை, பஞ்சாபிலிருந்து மணிப்பூர் வரை சென்றிருக்கிறேன். எங்கு சென்றாலும் அந்தந்த மாநிலத்தின் எளிய மக்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறேன்.
இரு சம்பவங்களைக் குறிப்பிட்டாக வேண்டும்.
பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாதத்தின் கடைசி நாட்கள். ஒரு நாள் என்னுடைய சோதனை முடிவதற்கு நேரமாகி விட்டது. இரவு பத்து மணிக்கு மேல். தெருவில் யாரும் இல்லை. என்னுடைய காரோட்டி சீக்கியர். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கூட இருந்த இஞ்சினீயரும் சீக்கியர். இருவருக்கும் காலிஸ்தானிகளை விட பஞ்சாப் போலிஸ் மீதுதான் பயம். “நீங்கள் இருக்கிறீர்கள். இல்லையென்றால் இரவில் நான் காரோட்ட மாட்டேன்,” என்று காரை ஓட்டுபவர் சொல்லிக் கொண்டார். சிறிது நேரம்தான் ஓட்டியிருப்பார், எங்களுக்கு முன்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று சீக்கியர்கள். நன்றாக குடித்திருக்க வேண்டும். எட்டு போட்டுக் கொண்டே வளைந்து வளைந்து சென்றார்கள். என் காரோட்டி காரை ஓரத்தில் நிறுத்தி அவர்கள் மறையும் வரை காத்திருந்தார். ஓவென்று அழுதார். ‘எல்லாம் குருவின் கிருபை’ என்றார். ‘என்ன?’ என்று நான் கேட்டேன். “இனி இங்கு எந்த பயமும் இல்லை. இது போன்று குடித்து விட்டு ஓட்டுவதை நான் பார்த்து எத்தனை நாட்கள் ஆகி விட்டன. சர்தார்கள் சரதார்களாக மாறி விட்டார்கள். மனம் நிறைவாக இருக்கிறது” என்றார். கார் சிறிது தொலைவு சென்றவுடன் சொன்னார். “என் தம்பியைப் பறி கொடுத்து விட்டேன். அவனிடம் இதே போன்ற மோட்டார் சைக்கிள் இருந்தது. இதே சாலையில்தான் அவன் சுட்டுக் கொல்லப்பட்டான். வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் கேட்கவில்லை. என் குடும்பத்தில் ஐந்து தலைமுறைகளாக ராணுவத்தில் பணியாற்றி இருக்கிறோம். எல்லோரும் சாகாமல், எதிரிகளின் குண்டுகளுக்குப் பலியாகாமல், திரும்பி வந்து விட்டோம். ஆனால் எங்கள் தலையெழுத்து எங்களில் ஒருவர் போலீஸ் குண்டுக்கு பலியாக வேண்டும் என்று இருந்திருக்கிறது.”
மற்றொரு சம்பவம் அஸ்ஸாமில் நடந்தது. இதைப் பற்றி நான் முன்பே எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். அஸ்ஸாமில் உல்ஃபா தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. நடந்த இடம் காடுகளுக்கு நடுவில் அல்ல. வயல்களுக்கு நடுவில். ஒரு கிராமப்புற இல்லத்தில். வீட்டின் எஜமானி கடுகடுவென்றிருந்தார். என்னிடம் அல்ல. அவர் கணவருக்கும் அவருக்கும் ஏதோ தகராறு. நான் இந்தியா அஸ்ஸாமின் முன்னேற்றத்திற்கு எவ்வளவு உதவுகிறது என்பதைச் சொல்லிக் கொண்டிருந்தேன். கணவர் இந்திய ஏகாதிபத்தியத்தைப் பற்றி என்னிடம் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். எங்களுக்கு இந்தியா வேண்டாம் என்று உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வீட்டின் சமையலறையில் இருந்து டேப் ரிகார்டரில் பம்பாய் படத்தின் ‘கண்ணாளனே’ பாட்டின் இந்தி வடிவம் ஒலிக்கத் தொடங்கியது. எனக்கு மனதிற்குள் சிரிப்பு. அஸ்ஸாமில் ரஹ்மான்! அதுவும் இந்தி ரஹ்மான்! இந்திய ஏகாதிபத்தியம் உங்கள் மனைவிக்குப் பிடிக்கும் போலிருக்கிறதே என்று கேட்கத் தோன்றியது. ஆனால் கேட்கவில்லை. அவர் உள்ளே சென்று மனைவியிடம் ஏதோ சொன்னார். அவரும் பதிலுக்கு உரத்தக் குரலைல் ஏதோ சொன்னார். திரும்பி வந்தவுடன் பாட்டு இன்னும் சத்தத்துடன் ஒலிக்கத் தொடங்கியது. ‘சரி, நம்மால் இங்கு பேசமுடியாது. வெளியே செல்லலாம்,’ என்று எங்களை வெளியே அழைத்துச் சென்றார். வெளியே இந்திய எதிர்ப்பின் காரம் சற்று குறைந்திருப்பதாகத் தோன்றியது. வீட்டரசிக்கு மனதிற்குள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன். திரும்பி வரும் போது என் கூட வந்தவரிடம் கேட்டேன். “இது தற்செயலாக நடந்ததா?” “இல்லையென்று தான் தோன்றுகிறது. பெண்கள் தங்கள் எதிர்ப்பைப் பலவழிகளில் காட்டுகிறார்கள். இதுவும் ஒன்றாக இருக்கலாம்.” அவரும் அஸ்ஸாமியர் என்பதால் கணவனுக்கும் மனைவிக்கும் நடந்த வாக்குவாதத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டவை என்ன என்பது அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். நான் மேலே அவரைத் தூண்டிக் கேட்க விரும்பவில்லை.
சாதாரண மக்கள், எங்கிருந்தாலும் சரி, அமைதியையே விரும்புகிறார்கள். அவர்களுக்கு தீவிரவாதிகளின ஏன் அரசை எதிர்க்கிறார்கள் என்பது பற்றிய புரிதல் இருக்கலாம். அவர்கள் தங்கள் கணவர்களை, சகோதர்களை, மகன்களை, நண்பர்களை, சொந்த இனத்தவர்களை நேசிக்கிறார்கள். நேசத்தின் விளைவாக அவர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள், அவர்களுக்கு உதவியும் செய்கிறார்கள். ஆனால் சொந்த அரசிற்கு எதிரான வன்முறை அவர்களுக்குப் பெரும்பாலும் புரிவதில்லை. அவர்கள் அதை விரும்புவதும் இல்லை.
இந்தியாவை உண்மையாகவே நேசிக்க வேண்டும் என்றால் இந்தியாவின் எளிய மக்களை நேசிக்க வேண்டும்.