தமிழகத்தில் கடைசியாக போர் என்று ஒன்று நடந்தது 1801ல். நாம் மாவீரர்கள் என்று இன்று போற்றும் கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள் போன்றவர்களுக்கு எதிராகப் போரிட்டவர்கள் மிகப் பெரிய ராணுவ அதிகாரிகள் அல்லர். மேஜர் பானர்மென், லெப்டினன்ட் கர்னல் அக்ன்யூ போன்றவர்கள்.
திப்புவை எதிர்த்து யார் போரிட்டார்கள் என்பதைப் பாருங்கள். ஆர்தர் வெல்லெஸ்லி ( பின்னால் நெப்போலியனைத் தோற்கடித்தவர்) கார்ன்வாலிஸ், ஜெனரல் ஹாரிஸ் போன்றவர்கள். இவர்களுடன் நிஜாமின் படைகளும் மராத்தியப் படைகளும் சேர்ந்து போரிட்டன.
இதற்காக நான் கட்டபொம்மன், ஊமைத்துரை மருதுபாண்டியர் வீரத்தைக் குறைத்து மதிப்பிடவில்லை. அஞ்சாநெஞ்சர்கள் என்று எதிராகப் போரிட்ட ஆங்கிலேயர்களே சொல்லியிருக்கிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில் அந்தக் காலகட்டத்தில் வீரர்கள் விளைந்த நிலம் மிகக் குறுகலான பரப்பளவைக் கொண்டது. மற்றவர்கள் நமக்கென்ன என்று இருந்து விட்டார்கள். இதனால் எதிர்த்துப் போரிட பெரிய ராணுவத் தளபதிகள் யாரும் தேவைப்படவில்லை. காரணம் ஆற்காட்டு நவாப்பும் தஞ்சாவூர் மன்னரும் ஆங்கிலேயர் கைக்குள் இருந்தார்கள்.
தாங்கள் வெற்றி பெறுவது நடக்காது என்று தெரிந்தும் போரிட்ட இவர்களின் தூய வீரத்தை இன்று நாம் மதிக்கிறோம். ஆனால் அன்றிருந்த தமிழ் மக்கள் – சில உள்ளூர் மக்கள், இவர்கள் சொந்த சாதிகளைச் சேர்ந்தவர்களில் வெள்ளைக்காரர்களுக்கு வால் பிடிக்காதவர்கள் போன்றவர்களைத் தவிர- பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
இந்த உண்மையின் கசப்பைக் குறைப்பதற்காகத்தான் இவர்களைப் பற்றி, இன்னும் சிலரைப் பற்றி, பல கட்டுக்கதைகள் – வானத்தையே வில்லாக வளைத்து விடுவார்கள் என்று சொல்லும் கதைகள் – உலவி வருகின்றன. வரலாற்றை வரலாறாகப் படிக்க நினைப்பவன் இக்கதைகளைக் கண்டு கொள்ள மாட்டான்.
இவர்களுக்கு மட்டும்தானா வீரம், வெள்ளையர்களுடன் சேர்ந்து போரிட்டவர்களுக்கு வீரம் இல்லையா என்ற கேள்வியை பெரியாரிய ஆதரவாளர் ஒருவர் கேட்டிருக்கிறார். தரைச் சக்கரம் போன்று ஆனால் அதன் வண்ணங்கள் துளி கூட இல்லாமல், இருந்த இடத்திலேயே சுற்றிச் சுற்றி வந்து புகை விடுவதுதான் பெரியாரிய அறிவாளிகள் தொடர்ந்து செய்து கொண்டிருப்பது.
மற்றவர்களுக்கு வீரம் இல்லை என்று நான் என்றும் சொல்லவில்லை. என்னுடைய எழுத்துக்களை தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பவர்களுக்குத் தெரியும். வெள்ளையர்கள் ஒரு புதிய சக்தி, இதுவரை பார்த்திராத சக்தி என்று புரிந்து கொண்டவர்கள் மிகச் சிலரே. திப்புவிற்கு புரிந்திருந்தது. மருது சகோதரர்களுக்கு ஓரளவு புரிந்திருந்தது. எனவே வெள்ளையர் தரப்பில் போரிட்டவர்களை நான் என்றுமே குறைவாக மதிப்பிட்டதில்லை.
பாஞ்சாலங்குறிச்சி போர் நடந்துகொண்டிருக்கும் போது நடந்த ஒரு சம்பவத்தை வெல்ஷ் குறிப்பிடுகிறார். எட்டயபுரம் தரப்பில் போரிட்டு உடல் முழுவதும் காயமுற்ற ஒரு படைத்தலைவர், வயதானவர், மெக்காலே முன்னால் வருகிறார். நாற்காலியில் அமர்ந்து “ஒரு பாளையக்காரர் எப்படி இறக்கிறார் என்று பார்க்க வேண்டுமா?” என்று மீசையை முறுக்கிக் கொண்டே அவர் மரணமடைகிறார்.