காலா!

என் மனைவியிடம் படம் பிடித்திருக்கிறதா என்று கேட்டேன். ‘நிச்சயம் பிடித்திருக்கிறது,’ என்றார். ஏன் என்று கேட்டேன். ‘ஆபாச காட்சிகள் இல்லை, ஆபாச வசனம் இல்லை. மரங்களையும் செடிகொடிகளையும் பதற வைக்கும் டூயட் இல்லை. ரஜினி சிறுமிகளோடு காதல் புரியும் காட்சிகள் இல்லை,’ என்றார். இல்லை இல்லை என்பதனாலேயே இருக்கிறது என்ற இந்த எண்ணம் பலருக்கு ஏற்பட்டிருக்கலாம். திரை அரங்கில் கூட்டமும் அதிகம் இல்லை. இடைவேளையில் ஒருவர் ‘மசாலா கொஞ்சம் மாறியிருக்கிறது. அவ்வளவுதான்,’ என்றார்.
எனக்கு படம் சுத்தமாகப் பிடிக்கவில்லை.
நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் போராட்டங்கள் காலம் காலமாக நமக்குப் பல வடிவங்களில் காட்டப்படுகின்றன. தீயவன் என்று கருதப்படுபவன் என்றும் முற்றிலும் தீயவன் இல்லை என்பதும் நமக்கு பலதடவைகள் சொல்லப்பட்டு விட்டன. ‘மும்மடங்கு பொலிந்தன அம்முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள்’ என்று கம்பன் சொல்வது தீயவன் என்று நாம் கருதிக் கொண்டிருந்தவனின் உள்ளொளியைப் பற்றி. மாட்சி பெரிதாக இருப்பவன் வீழ்ச்சியும் பெரிதாக இருக்கும் என்பதைத்தான் உலக இலக்கியங்கள் முழுவதும் சொல்கின்றன. மனித மனங்களில்தாம் நன்மையும் தீமையும் ஒன்றை ஒன்று தினமும் உராய்ந்து கொள்கின்றன என்றும் அவை சொல்கின்றன.
ஆங்கில இலக்கியத்தின் மகத்தான நாயகர்களில் ஒருவன் சாத்தான். அவன் சொல்கிறான்: The mind is its own place, and in it self/Can make a Heaven of Hell, a Hell of Heaven. அவனே மறுபடியும் சொல்கிறான் better to reign in hell than serve in Heaven. இந்த இடையறாத போராட்டங்களின் பல வடிவங்களின் ஒரு வடிவத்தையாவது நேர்த்தியாகப் பிடிப்பதைத்தான் கலைஞன் காலம் காலமாகச் செய்து கொண்டிருக்கிறான். தேர்ச்சி பெற்ற கலைஞன் வடிவத்தை வண்ணமயமாக ஜொலிக்கச் செய்வான். அதிலிருந்து சிதறும் வண்ணங்கள் நம்மை வியப்படையச் செய்யும். தேர்ச்சி கைவரப் பெறாத கலைஞன் வடிவத்தின் ஒரே பக்கத்தை மட்டும் கறுப்பு வெள்ளையில் காட்டி, மகிழ்ச்சி, என்பான். திரு ரஞ்சித் இரண்டாம் ரகம்.
படம் முழுவதும் ஓர் அமெச்சூர்தனம் இழையாக வந்து கொண்டே இருக்கிறது. பேட்டை ரௌடியாக இருந்து குப்பைக் கொட்டும் காலாவிற்கும், பேட்டையை விட்டு வெளியேறி ரௌடித்தனம் செய்யும் தாதாவிற்கும் வித்தியாசம் பேட்டை ஆள் ஐயப்ப பக்தரைப் போல வேஷம் அணிந்திருக்கிறார், மற்றவர் அரசியல்வாதியைப் போல உடை அணிந்திருக்கிறார். அவ்வளவுதான். ஒருவரை ஒருவர் ஒட்டிக் கொண்டு வாழும், நெருக்கடி மிகுந்த தாராவியில் இவருக்குப் பெரிய வீடு. முன்னால் சிறு மைதானம் போன்ற காலி இடம். ஐயப்ப பக்தர் சிறிய அளவில் செய்து வெற்றி பெற்றதை அரசியல்வாதி பெரிய அளவில் செய்து வெற்றி பெற்றிருக்கிறார் அவ்வளவுதான்.
சிறுபிள்ளைத்தனமான குறியீடுகளால் படம் முழுவதையும் ரஞ்சித் நிரப்பியிருக்கிறார். இரு பூக்கள் முத்தமிட்டுக் கொண்டிருக்கும் குறியீட்டிலிருந்து இராவண காவியத்தை மேஜை மேல் காட்டும் குறீயிடு வரை வளர்வதற்கு நாம் எண்பது ஆண்டுகள் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது என்ற இந்தச் செய்தி தமிழ் சினிமாவின் வளர்ச்சியைக் குறிப்பது ஆகாது.
குடைச்சண்டைக் காட்சிகள் Kingsman- The secret service படத்திலிருந்து அப்பட்டமான காப்பி. அந்தப் படம் காமெடி. இதில் ரஜினி மிகவும் சீரியசாகச் சண்டை போட்டு சிரிப்பை வரவழைக்கிறார்.

தாராவியும் ஒரு குறியீடாம். இன்றைய தாராவிக்கும் படத்தின் தாராவிக்கும் எந்த்த் தொடர்பும் கிடையாது என்பதை நான் முந்தையப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். கற்பனை செய்வது கலைஞனின் உரிமை என்று சிலர் சொல்கிறார்கள். இடம் கற்பனையாக இருந்தால் இடத்தில் நடக்கும் போராட்டமும் கற்பனையாக இருக்கும் என்றுதான் மக்கள் நினைத்துக் கொள்வார்கள். தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு எதிராக பல அநியாயங்கள் நடந்து வருகின்றன. அவற்றிற்கு எதிராக தலித் மக்களோடு தோளோடு தோளாக நின்று போர் புரியும் பல ஜாதி இந்துக்கள் இருக்கிறார்கள். இவர்களை பற்றி திரைப்படம் எடுத்தால் அது தமிழ் மண்ணோடு ஒத்த்தாக இருந்திருக்கும். திரைப்படம் எடுப்பது அவர் உரிமை என்றால் அதைக் கடுமையாக விமரிசனம் செய்வது என்னுடைய உரிமை. தாராவியில் ‘நிலம் என் உரிமை’ என்று சொல்வது கோடிசுவரின் குரலாகத்தான் இருக்க முடியும். அங்கு ஒரு சதுர அடி நிலம் ஒரு லட்சத்திற்கும் மேல் இருக்கும்.
ரஜினியை தாராவி நாயகனாகத் தேர்ந்தெடுத்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. மக்களை ஈர்ப்பதற்காக அது நேர்ந்தது என்பதை சரியான காரணமாக எடுத்துக் கொண்டாலும் பத்தமடைப் பெண்ணாக வருவதற்கு ஹூமா குரேஷிதானா கிடைத்தார்? காலாவின் மனைவி வேடத்திற்கு ஈச்வரி ராவ்தானா கிடைத்தார்? இவரே தமிழர்களையும் தலித்துகளையும் உதிரி வேடங்களில் பங்கு பெறச் செய்து இருவரையும் அவமதிப்பதின் குறியீடுதான் இந்தப் பாத்திரத் தேர்வுகள் என்று சிலர் சொல்லலாம்.

வில்லனை ராமனை வழிபடுபவனாகவும். கதாநாயகனை இராவணனின் தட்டையான மறு உருவாகவும் அமைப்பதும் படைப்பாளியின் உரிமை. புத்தரையும் காட்டுகிறார். ஆனால் புத்தமதத்திலும் இராவணன் தீயவர்கள் பக்கமே நிற்கிறான். மேலும் தலித்துகளோடு சேர்ந்து நிற்கும் கோடிக்கணக்கான மற்றைய இந்துக்கள் ராமனை வழிபடுபவர்கள். அவர்களை நாங்கள் புண்படுத்துவோம் என்றால் தலித்துக்கள் தனிமைப்பட்டுப் போவார்கள். எங்களுக்குத் தனியாக, அல்லது மற்றைய மதத்தினரோடு சேர்ந்து போர் புரியும் திறமை இருக்கிறது என்று ரஞ்சித்தை ஆதரிக்கிறவர் சொல்லலாம். அப்படிச் சொன்னால் அதற்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் இப்படிச் சொல்வதை தலித் மக்களில் பெரும்பாலானவர்கள் விரும்ப மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
கறுப்பு, சிவப்பு நீலம் ஒரு தரப்பினருக்கு பெரியார், மார்க்ஸ் மற்றும் அம்பேத்கர் கொள்கைகளுக்குக் குறியீடு என்றே அதே வண்ணங்களை காளிக்கும், சிவனுக்கும் இராமனுக்கும் குறியீடுகளாக இன்னொரு தரப்பினர் கொள்வதில் எந்தத் தடையும் இருக்க முடியாது. குறியீட்டுப் போர்கள் சினிமாவில் தாராளமாக நடக்காலாம். ஆனால் நிஜவாழ்வில் குருட்டுத்தனமாகப் போராடுங்கள் என்று சொல்வது அழிவில்தான் கொண்டு செல்லும். குருட்டுத்தனமாகப் போராடு என்று சொல்பவர்கள் ரஜினியைப் போல, காலாவைப் போல, அதிசயமாக துப்பாக்கிக் குண்டுகளையும் எதிர் கொண்டு மறு பிறப்பு எடுத்துக் கொண்டிருப்பார்கள். போராடி மடிந்து போகிறவர்கள் சாதாரண மக்களாகத்தான் இருப்பார்கள். அவர்களின் தலித்துகளும் இருப்பார்கள், மற்றவர்களும் இருப்பார்கள்.
மொத்தத்தில் காலா திரைப்படத்தை தலித் மக்களின் நியாயமான போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் மிகச் சாதாரணமான மசாலா படமாகத்தான் நான் பார்க்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s