ஈவேராவை ஏன் பெரியார் என்று அழைக்கிறீர்கள் என்று பல நண்பர்கள் கேட்கிறார்கள். நான் அவரை உண்மையாக மதிக்கிறேன், அதானால்தான் என்பதுதான் எனது பதிலாக இருந்திருக்கின்றது. பெரியாரின் மீது எனக்குக் கடுமையான விமரிசனங்கள் இருக்கின்றன. அவருடைய கொள்கைகள் பிராமணர் அல்லாத இடைத்தட்டு சாதிகளுக்கே உதவி செய்தன என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. ஆனால் அவர் மனத்தளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம்தான் இருந்தார் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.
தூத்துக்குடித் துப்பாக்கி சூட்டில் 13 பேர்கள் இறந்து விட்டனர். தமிழகத்தில் இது நடந்திராத ஒன்று என்று கூறப்படுகிறது. ஆனால் சுதந்திரம் அடைந்த முதல் ஆண்டுகளில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக கொடிய அடக்குமுறை அவிழ்த்து விடப் பட்டது என்பது பலர் அறிந்திராத ஒரு தகவல். காங்கிரஸ் அரசாங்கம் புரட்சி என்ற சொல்லையே வேரோடு இந்தியாவிலிருந்து அகற்ற வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தது. கம்யூனிஸ்டுகள் அந்தக் காலகட்டத்தில் எடுத்த நிலைப்பாடு தவறு என்று இன்று தெரிந்தாலும், அன்று கம்யூனிஸ்டு இயக்கத்திற்காக பல தோழர்கள் உயிரைக் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். 1944லேயே தொழிற்சங்கத்திற்கு எதிராக நடத்திய ரௌடித்தனத்தை முறியடிக்கப் போராடிய நான்கு தோழர்கள் கோவைச் சிறையில் தூக்கிலிடப்பட்டார்கள்.
1950ம் ஆண்டு கம்யூனிஸ்டுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைகளிலும் கொடிய அடக்குமுறை அவிழ்த்து விடப்பட்டது. மதுரையிலும் சென்னையிலும் இரண்டு தோழர்கள் உண்ணாவிரதம் இருந்து மடிந்தனர். சேலம் சிறையிலும் கடலூர் சிறையிலும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. சேலம் சிறையில் மட்டும் 22 தோழர்கள் – ஆமாம் 22 தோழர்கள் – துப்பாக்கிச் சூட்டில் மடிந்தனர். ஆட்சியாளர்களுக்குப் பயந்து எந்தவொரு இயக்கமும் கண்டன அறிக்கை கூட வெளிடவில்லை. அந்தக் கொடுமைகளைக் கண்டித்தது பெரியார் மட்டுமே. 15. 2. 1950ம் ஆண்டு விடுதலை ஒரு தலையங்கம் எழுதியது:
சேலம் சிறைக் கொடுமைகள் இதுவரையில் 22
சேலம் பலி 22 ஆகி விட்டது.. ரயில் விபத்தோ, பஸ் விபத்தோ ஏற்பட்டால் விபத்தில் மாண்ட உயிர்களின் பெயர்கள் உடனே வந்து விடுகின்றன. ஆனால் சேலம் பலிப்பட்டியல் இன்று வரை வராத காரணம் தெரியவில்லை.
தங்கள் கொள்கைக்காக உயிர்விட்ட ஒப்பற்ற வீரர்களை அதிகார வர்க்கம் மரக்கட்டைகளாகக் கருதுகிறதா? அல்லது அவர்களும் மனிதர்கள், அவர்களுக்கும் குடும்பங்கள், உற்றார், உறவினர் உண்டு என்று கருதியிருக்கிறதா? சவங்களைக் கூட இவர்கள் கண்ணில் காட்டியதாகத் தெரியவில்லை.
…. ஊரெங்கும் 144 தடையும் ஊர்வலத்திற்குத் தடையும் தொழிலாளர் வாய்களில் அடக்குமுறைத் துணிமுடிச்சும் இல்லாமலிருந்தால் சேலம் நிகழ்ச்சிக்கும் நாள் தோறும் கண்டனம் சரமாரியாகக் கொட்டுவதைக் காணலாம். இன்று பேச்சு மூச்சு இல்லை. தமிழ்நாட்டில் சுடுகாட்டு அமைதி நிலவிக் கொண்டிருக்கிறது. 22 பிணங்களும் தொழிலாளர் உலகைக் கண்டு ஏளனமாகச் சிரிக்கின்றன. நினைக்க நினைக்க நெஞ்சம் துடிக்கிறது!”
பெரியார் படுகொலைக் கண்டித்து கண்டனக் கூட்டங்கள் நடத்தும்படி அறிக்கையும் விட்டிருந்தார்.
இது போன்ற நிலைப்பாடுகளை அவர் எடுத்திருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காகவே அவரை நான் மிகவும் மதிக்கிறேன்.
பெரியார் பற்றி தொடர்ந்து எதிர் மறையாகவே எழுதி விட்டு அதை சற்று balance செய்வதற்காக இந்த கட்டுரையை எழுதி உள்ளீர்கள் என எனக்குப் படுகிறது. நேர்மறையோ அல்லது எதிர்மறையோ எப்படி இருந்தாலும் உண்மையாக, ஆக்கப் பூர்வமாக உள்ள வரை வரவேற்கப்பட வேண்டியது என கருதுகிறேன். உங்கள் வலைத்தளத்தில் மேலும் பல கட்டுரைகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். (main Stream – ல் எழுத முடியாததையும் சேர்த்து)
LikeLike