தமிழ்நாட்டை எதிர்நோக்கி இருக்கும் சவால்கள்:
1. விஷயம் தெரிந்த நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். வட மாவட்டக் கிராமங்களில் வறுமை அதிகமாகி விட்டது என்கிறார். குறிப்பாக தலித் மற்றும் வன்னியர் இளைஞர்கள் பலர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்கிறார். முன்பு கேரளாவிற்குச் சென்று கொண்டிருந்தவர்களுக்கு இப்போது அங்கும் வேலை கிடைப்பது அரிதாக ஆகி விட்டதாம். விவசாய வேலைகளும் குறைந்து விட்டன என்கிறார். புள்ளி விவரங்கள் அவர் சொல்வது சரிதானோ என்று நினைக்க வைக்கின்றன.
2. தமிழகத்தில் வெளியிலிருந்து முதலீடு வெகுவாரியாகக் குறைந்து விட்டது. 2017ல் இந்தியாவில் செய்யப்பட்ட முதலீட்டில் 1% கூட தமிழ்நாட்டில் செய்யப்படவில்லை. மொத்தம் இந்தியாவில் செய்யப்பட்ட முதலீடு 39.5 லட்சம் கோடி. தமிழ்நாட் டில் செய்யப்பட்ட முதலீடு வெறும் 3131 கோடி. அண்டை மாநிலமான கர்நாடகாவில் 1.52 லட்சம் கோடி. நம்மை விட 50 மடங்கு அதிகம்.
3. நமது பொறியியல் மற்றும் தொழிற்நுட்பக் கல்லூரிகளின் நிலைமை நமக்கு நன்றாகத் தெரியும். 140 கல்லூரிகளில் (மொத்தம் 526 கல்லூரிகள்) மாணவர் சேர்க்கை 16 சதவீதம் கூட இல்லை. மொத்தம் 77509 பேர்கள் படிக்க வேண்டிய இடங்களில் 12399 படிக்கிறார்கள். வருடத்திற்கு சுமார் 1.5 லட்சம் படித்து வெளியில் வருகிறார்கள் என்றால் அவர்களில் மூன்றில் ஒருவர் படிப்பை முடிக்காமல் வெளியில் வருகிறார். தமிழ்நாட்டில் இருக்கும் சுமார் 400 பாலிடெக்னிக் கல்லூரிகளில் கூட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருக்கின்றன. தமிழகத்தில் சுமார் 400 ஐடிஐ என்று சொல்லக் கூடிய தொழிற்கல்விக் கூடங்கள் இருக்கின்றன. இவை இப்போது இருப்பதை விட பலமடங்குகள் அதிகம் ஆக வேண்டும் என்பது தேவை என்ற உண்மை ஒரு புறம் இருக்க, தமிழகத்தின் இன்றையத் தொழிற்சாலைகளில் 12% மட்டுமே ஐடிஐயில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. நமது வீடுகளில் வேலை செய்யும் எலெக்ட்ரீஷியன் போன்றவர்களில் 9% மட்டுமே ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள். இவர்களில் யாருக்கும் வேலை கொடுக்கும் நிலையில் தமிழகம் இல்லை. வெளிமாநிலங்களிலும் நிலைமை சீராக இல்லை.
4. தமிழத்தில் முதலீடுகள் வெகுவாகக் குறைந்து விட்டது ஒருபுறம் இருக்க தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடு சென்று வேலை செய்பவர்கள் அனுப்பும் பணமும் குறைந்து விட்டது. 2013-14ல் இந்தியா முழுவதும் 4.3 லட்சம் கோடியாக இருந்தது இப்போது 3.7 லட்சம் கோடியாகக் குறைந்து விட்டது. இதில் தமிழ்நாட்டிற்கு சுமார் 14% வருகிறது. இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்பவர்களும் வெகுவாகக் குறைந்து விட்டார்கள். 2014ல் எட்டு லட்சம் பேர்கள் வெளிநாடு சென்றார்கள் என்றால் அது 2017ல் பாதிக்கும் மேல் குறைந்து விட்டது. எனவே தமிழகத்திற்கு வந்து கொண்டிருந்த வருடத்திற்கு சுமார் 60000 கோடி ரூபாய்கள் கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது. கூடவே வெளிநாட்டிலிருந்து வேலை இழந்து வரும் மக்கள்தொகையும் அதிகரிக்கும் அறிகுறிகள் தெரிகின்றன. அரசினால் இவர்களுக்கு எந்த உதவியும் செய்ய இயலாது.
5. தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடு செல்பவர்களில் 75% இந்துக்கள் என்றால் 15 % முஸ்லிம்கள். 10% கிறித்துவர்கள். தமிழகத்தின் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் ஆறு சதவீதம் என்றால் கிறித்துவர்கள் ஐந்து சதவீதம் இருப்பார்கள். எனவே வெளிநாடு செல்பவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இவர்களாக இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.
6. தமிழகத்தில் விவசாயத்தைச் சார்ந்து இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நகரங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதனால் நமக்குத் தேவைப்படும் மின்சாரமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று நமக்குத் தேவையான மின்சாரத்தில் 60 சதவீதம் வெளி மாநிலங்களிலிருந்து வருகின்றன. தூய்மையான மின் சக்தியைத் தயாரிப்பதில் தமிழகம் முதல் இடம் வகிக்கிறது என்றாலும், அதன் கூடிக் கொண்டே இருக்கும் தேவைகளை தூய்மையான மின்சாரம் அளிக்கும் என்று ஒரு ஆய்வு சொன்னாலும், இது உண்மையாக நடக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த ஆய்வு அணுமின்சக்தி உற்பத்தி நமது தேவையில் 20% சதவீதத்தை அளிக்கும் என்று சொல்கிறது! மின்சாரத்திற்கு முதலீடு செய்வதற்கும் தனியார் நிறுவனங்கள்தாம் வரவேண்டும். நமது சுற்றுச்சூழல் பயங்கரவாதிகளோடு தினமும போர் புரிய அவர்கள் விரும்ப மாட்டார்கள். இப்போது தமிழகத்தில் எந்தத்துறையிலும் முதலீடு செய்வதற்கும் தனியார் நிறுவனங்கள் தயங்குவார்கள். அல்லது கடுமையான நிபந்தனைகளுடன் முதலீடு செய்வோம் என்பார்கள். குறிப்பாக கடலோர மாவட்டங்களில். தூத்துக்குடியில் நடந்தது மற்றைய மாவட்டங்களில் நடக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.
தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், உடனடி, அதிரடித் தீர்வுகளை ஆதரிக்க மாட்டார்கள்.