1. ஆலையை மூட வேண்டும்!
ஆலை அறுபது நாட்களாக மூடித்தான் இருக்கிறது. திறப்பது நீதிமன்றத்தின் கையில் இருக்கிறது.
2. ஆலை விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும்!
ஆலை விரிவாக்கத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்து விட்டது
3. ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்!
எந்த ஆலையையும் நிரந்தரமாக எந்த அரசினாலும் சட்ட விரோதமாக மூட முடியாது.
4. ஒரு தனியார் நிறுவனத்திற்கு அரசு துணை போக வேண்டுமா?
ஒரு பெட்டிக்கடைக்குக் கூட அரசு துணை போக வேண்டும் – அதை சட்ட விரோதமாக, நிரந்தரமாக மூடச் சொல்லி போராட்டங்கள் நடந்தால். அதற்காகத்தான் அரசு இருக்கிறது.
5. ஸ்டர்லைட் மாசுபடுத்துகிறது!
ஸ்டர்லைட் மாசு படுத்துகிறது என்று பசுமை நீதிமன்றத்தில் நிறுவி விட்டால், அது தொடரவே முடியாது. தூத்துக்குடியில் ஸ்டர்லைட மட்டும் மாசுபடுத்தவில்லை. பல ரசாயன, பெருந்தொழிற்சாலைகள் மாசுபடுத்துகிறன. எனவே ஒரு தொழிற்சாலையை மட்டும் குறி வைத்துப் போராடுவது அறமாகாது.
6. நாங்கள் மக்களுக்காகப் போராடுகிறோம் – கம்யூனிஸ்டுகள்!
ஸ்டர்லைட் ஆலையை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். பாட்டாளிமக்கள் ஒற்றுமையைப் பற்றிப் பேசும் கம்யூனிஸ்டு ஆலையில் வேலை செய்யும், ஆலையை நம்பி இருக்கும் பாட்டாளிகளின் நிலைமை என்ன ஆகும் என்ன ஆகும் என்பதைப் பற்றி ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள்? அவர்களை பற்றி இவர்கள் ஒரு நாள் கூடப் பேசியதாகத் தெரியவில்லை. பாட்டாளி மக்களின் குடியிருப்புகளைத் தீயிடுவது எந்த வகையில் நியாயம்? இவர்களைப் பாட்டாளி மக்கள் எப்படி நம்புவார்கள்? ஸ்டர்லைட் போராட்டத்தின் வெற்றி தூத்துக்குடியில் இருக்கும் மற்றையத் தொழிற்சாலைகளுக்கும் உலை வைக்கும் என்று அவர்கள் பயப்பட மாட்டார்களா? மேலும் இது போன்ற போராட்டங்கள் மூலம் ஆலைகள் மூடப்படுவதால் தமிழகத்தில் முதலீடுகள் வருவது வெகுவாகக் குறைந்து விடும். மேற்கு வங்கத்தின் கதை இங்கு மறுபடியும் நிகழும்.
7. துப்பாக்கிச் சூடு சரியென்கிறீர்களா?
நிச்சயம் சரியல்ல. மக்களிடம் பேசி, மக்களிடம் தங்கள் தரப்பை எடுத்துச் சொல்லி, மக்களை தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ள வேண்டியது அரசின் வேலை. வன்முறை நிகழாமல் வருமுன் காக்க வேண்டியது அரசின் வேலை. இவற்றை முழுமையாகச் செய்யத்தவறியது அரசு. கையாலாகாத, மக்களைப் பலி வாங்கிய அரசு. இது தொடர்ந்து பதவியில் இருப்பது தமிழக மக்களுக்கு ஒருபோதும் நன்மை தராது.
8. வன்முறையைத் தூண்டி விட்டவர்களை ஆதரிக்கிறீர்களா?
நிச்சயம் இல்லை. அவர்களை அடையாளம் கண்டு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
9. மக்கள் போராட்டங்களே நடத்தக் கூடாது என்கிறீர்களா?
நிச்சயம் இல்லை. போராட்டங்களே ஜனநாயகத்தின் முத்திரைகள். ஆனால் போராட்டங்கள் அழிவிலும், இறப்புகளிலும் முடிய நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்கிறேன். யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தவற்றையும், சிரியாவில் நிகழ்ந்து கொண்டிருப்பவற்றையும் தமிழகத்தில் திரும்ப நடத்த முயன்று கொண்டிருக்கும் பிரிவினைவாதக் கயவர்களே வன்முறைப் போராட்டங்களை விரும்புவார்கள்.
10. என்னதான் செய்ய வேண்டும் என்கிறீர்கள்?
கொதிநிலையில் மக்கள் இருக்கும்போது ஏதும் செய்ய முடியாது. ஸ்டர்லைட் திரும்பி வரும் என்ற நம்பிக்கை எனக்கும் இல்லை. இந்த நிலைக்கு மக்களைக் கொண்டு சென்றது அரசின் மூடத்தனம். ஸ்டர்லைட் நிர்வாகத்தின் தடித்தனம். அரசியல்வாதிகளுக்கும் மிரட்டுபவர்களுக்கும் கொடுத்த பணத்தை சுற்றியிருக்கும் கிராம மக்கள் முன்னேற்றத்திற்கும் தூத்துக்குடி மக்களின் முன்னேற்றத்திற்கு செலவிட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. மூடர்களின், தடித்தனம் பிடித்தவர்களின் செயல்களே போராட்டத்தின் வெற்றிக்கு வழி வகுக்கும் என நினைக்கிறேன். ஆனால் தொலைநோக்கில் பார்க்கும் போது இந்தப் போரட்டம் தமிழகத் தொழிற்வளர்ச்சிக்கு ஒரு பெரிய தடையாக அமையும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. தடைகளைத் தாண்டி முன்னேற தமிழர்களுக்கு ஆற்றல் இருக்கிறது என்றும் நான் நம்புகிறேன். சுற்றுச்சூழல் பயங்கரவாதிகளை மக்கள் ஒருநாள் அடையாளம் கண்டு கொள்வதற்கும் இந்தப் போராட்டம் உறுதுணையாக இருக்கும் என்பதிலும் எனக்கு ஐயம் இல்லை.
யோசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்! ஆத்திரப்படுவது அறிவிலிகளின் செயல்!
ஆயத்தங்கள் செய்யத்தவறியது பெரும்பிழை.
ஆனால் கலெக்டர் ஆஃபீஸை தீவைத்துக் கொளுத்த பெரும்படையாக வந்து புகுந்து, ஊழியர்கள் வாகனங்களைத் தீயிலிட்டு, barricadeகளை கடாசி, Petrol குண்டு வீசி, எல்லா வித எச்சரிக்கைகளையும் உதாசீனம் செய்யும் ஒரு கும்பலை, போலீசார் என்னதான் செய்யவேண்டும் என்கிறீர்கள்?
Last resortஐ குருதிவேட்கையாகவும், ஒடுக்குமுறையாகவும் பார்ப்பது குறுகிய, கோணலான பார்வை அல்லவா? உணர்ச்சிப்பசப்பலை அரசியல் அறுவடை செய்யும் கலாசாரத்தில் ஊறிய பொதுமக்கள், அதைத் தாண்டி சிந்திக்கத் திணறுவதில் வியப்பில்லை. ஆனால் அறிஞர்களும் அவ்வாறு சொன்னால் எப்படி?
இப்படி சொல்வதாலேயே ஒரு நாட்ஸிய ஒழுங்குவிரும்பி, இதயமற்றவன் என்றெல்லாம் வசவு விழுகிறது; முக்காடு போட்டுக்கொண்டு கமெண்ட் போடவேண்டி இருக்கிறது!
LikeLike
இது போல ஆலைகள் வேண்டுமா, வேண்டாமா எனப் பெருங் குழப்பத்தில் இரு ந்தேன். தற்போது புரிகிறது. இ ந்த பிரிவினைவாதிக:ளாலும் , தமிழ் தேசியம் பேசும் சில அயோக்கியர்களாலும் தான் தமிழகத்திற்கு முதலீடே வரவில்லை.. மேலும் ஆளும் அரசு அறிவின்றி செயல்படுவதும் ஒரு காரணம். . அனைத்து கட்டுரைகளும் அருமை. ஜெயமோகன் சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
LikeLike