காலச்சுவடு பதிப்பகத்தின் மீது திரும்பத் திரும்ப அவதூறுகள் சுமத்தப் படுகின்றன. தமிழைப் பொறுத்தவரை என்னுடைய நாவல்கள் மற்றும் கட்டுரைகளை காலச்சுவடு மற்றும் தி இந்து பதிப்பித்திருக்கிறார்கள். தி இந்து ராயல்டி தொகையை இது வரை ஒழுங்காக அனுப்பி வருகிறது.
நான் பல ஆண்டுகள் காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து எனக்கு வர வேண்டிய ராயல்டி தொகையை நன்கொடையாக தன்னார்வ நிறுவனங்களுக்கோ அல்லது தனிப்பட்டவருக்கோ நேரடியாக அனுப்பச் சொல்லி வந்தேன். அவை தவறாமல் நடந்தன. கடந்த சில ஆண்டுகளாக நானே பெற்றுக் கொண்டு நான் தேர்ந்தெடுத்த சில தன்னார்வ நிறுவனங்களுக்கோ அல்லது தனியாருக்கோ கொடுத்து வருகிறேன். புலிநகக் கொன்றை, கலங்கிய நதி, அக்கிரகாரத்தில் பெரியார், திரும்பிச்சென்ற தருணம் புத்தகங்களுக்கு கிடைத்த ராயல்டியை இவ்வாறுதான் பகிர்ந்து கொண்டேன். ‘டப்ளின் எழுச்சி’ மொழிபெயர்ப்பிற்கு மொத்தத் தொகை, கணிசமான தொகை கிடைத்தது. அதையும் ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்படுத்தினேன்.
மேற்கத்திய ஓவியங்கள் விலை அதிகமானதால் ராயல்டியும் அதிகமாகக் கிடைத்திருக்கும். ஆனால் புத்தகத்தின் விலையை குறைவாக வைக்க வேண்டும் என்பதற்காக ராயல்டி தரவேண்டாம் என்று சொல்லி விட்டேன். இரண்டாம் பாகம் வெளிவர இருக்கிறது. அதற்கும் வேண்டாம் என்று சொல்லி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டிருக்கிறேன்.
எனக்கு ராயல்டியாக காலச்சுவடு கொடுத்த தொகை மற்றும் நான் வேண்டாம் என்று விட்டுக் கொடுத்த தொகை மொத்தத்தில் மிகக் கணிசமானது என்பதையும் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். ஒதுக்கித் தள்ளக் கூடிய தொகை நிச்சயம் அல்ல.
எனக்கும் கண்ணனுக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. புத்தகங்களின் விலையைக் குறைக்க அவர் இன்னும் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் அதே நேரத்தில் எனக்கு பதிப்புத் துறையில் அனுபவம் கிடையாது. அவருக்கு இருக்கிறது. நேர்மையாக, அதே நேரத்தில் வியாபர நிறுவனத்தை வியாபர நோக்கோடு நடத்த வேண்டும் என்ற அக்கறை அவருக்கு இருப்பதை நான் மதிக்கிறேன். எனக்கும் காலச்சுவடு பதிப்பகத்தில் ஒரு சிறிய அளவில் பங்கு இருக்கிறது! அது வியாபார அளவில் வெற்றி பெற்றால் அது எனக்கும் வெற்றிதான். எழுத்தாளர் என்ற முறையில் அவரோடு ஒப்பந்தம் செய்து கொள்ளும் போது நாம்தான் கண்ணைத் திறந்து கொண்டு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். எழுத்தாளன் என்ற முறையில் எனக்கு எந்த பிரச்சினையும் இதுவரை இல்லை. இனிமேலும் இருக்காது.
எனது ஆங்கில புத்தகங்களுக்கு கிடைக்கும் ராயல்டி எவ்வளவு சீராக வருகிறதோ அதே அளவு சீராக காலச்சுவடு நிறுவனத்திலிருந்தும் கிடைக்கிறது.
அனுபவம் உள்ள காலச்சுவடு எழுத்தாளர்கள் அனைவரும் காலச்சுவடு மீது அவதூறுகள் செய்யப்படுவதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் இருக்கும் பதிப்பகங்களில் எழுத்தாளரின் உரிமைகளை மதித்துச் செயல்படும் மிகச் சில பதிப்பகங்களில் காலச்சுவடு ஒன்று என்று மூத்த எழுத்தாளர்களில் பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். காலச்சுவடு பதிப்பகம் இருப்பதனால் நன்மை பெற்ற எழுத்தாளர்கள் அதை அவதூறு மழையில் நனைய விடக் கூடாது.
The last para is juvenile. A publisher may have done good to you and similar others. We can’t say he was good to all. Those who are benefited will endorse the publisher; and those who are aggrieved, will definitely berate the publisher. This experience is common all walks of life: for e.g hospital. If you were treated well and got cured, you’d recommend it to others. If someone unfortunately lost his loved one after admitting to the same hospital, will warn others against the hospital. Therefore, if you are benefited, recommend. But how is it possible for you to gang up against those who were wronged?
Vinayagam
LikeLike