ஸ்டெர்லைட் போராட்டம் ஆலையை மூடுவதற்காக என்று பல பத்திரிகைகள் சொல்லுகின்றன. ஆனால் சில பத்திரிகைகள் விரிவாக்கத்தைத் தடுப்பதற்காக என்று சொல்லுகின்றன. மக்கள் எதற்காகப் போராடுகிறார்கள் என்பதைக் கூடத் தெரியாதவர்களால் தமிழக ஊடகங்கள் நிரம்பியிருக்கின்றன என்பது தமிழகத்தின் சாபக்கேடு.
இந்தப் போராட்டத்தை முன்னின்று இயக்கும் சுற்றுச்சூழல் பயங்கரவாதிகள் The Toxic Conspiracy என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.
1.அந்த அறிக்கை என்ன சொல்கிறது?
சுற்றுச்சூழலை மாசுபடுத்தவில்லை என்று ஸ்டெர்லைட் நிறுவனத்தினர் கூறுகிறார்கள், ஆனால் அவர்கள் பொய் சொல்வதில் வல்லவர்கள் என்கிறது. இதன் பொருள் எங்களிடம் ஆதாரம் ஏதும் இல்லை, ஆனாலும் அவர்கள் நிச்சயம் மாசுபடுத்தி இருக்கிறார்கள் என்பதே! இப்படிப் பொத்தாம் பொதுவாக ஒரு நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுவதே இவர்களின் வழக்கம். இதற்கு முன்னால் அணுக்கழிவுகளை ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது என்று 2011ல் குற்றம் சாட்டினார்கள்.
http://archive.tehelka.com/story_main49.asp?filename=Ne230411SILENT.asp
அடிப்படை நேர்மையிருந்தால் இந்தக் குற்றச்சாட்டின் நிலைமை என்ன என்பதை அவர்கள் விளக்கியிருக்க வேண்டும். ஆனால் இதைப் பற்றி அறிக்கையில் பேச்சுமூச்சையே காணோம். எனவே இது பொய்யான குற்றச்சாட்டு என்பது உறுதி
2. இப்போது உண்மை நிலை என்ன?
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் காற்றில் ஆலையால் வெளியிடப்படும் புகையை உடனுக்கு உடன் ஆராய்ந்து தகவலை நமக்குத் தருகிறது. இதற்கு real time monitoring என்று பெயர். இதை இந்த வலைத்தளத்தில் காணலாம்.
http://www.tnpcb.gov.in/#
காற்றில் சல்ஃபர் டை ஆக்ஸைடை விடுகிறார்கள், தாமிரதாதுவை விடுகிறார்கள் என்று சொல்வதெல்லாம் வடிகட்டிய பொய் என்பது இதிலிருந்து தெரிய வரும். வலைத்தளத்தில் தகவல் உடனுக்குடன் வெளியிடப்படுவதால் இதில் தகிடுதத்தம் செய்ய வழியில்லை. மேலும் ஸ்டெர்லைட்டை விட பல மடங்குகள் ஸ்பிக் நிறுவனம் காற்றில் சல்ஃபர் டை ஆக்ஸைடை வெளியிடுகிறது என்பதை இந்த வலைத்தளத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். உடனே நான் ஸ்பிக்கை மூடச் சொல்கிறேன் என்று நினைக்கக் கூடாது. காற்றை மாசு படுத்துவதில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பங்கு அதிகம் இல்லை என்பதைத்தான் இந்த வலைத்தளம் நிறுவுகிறது. இந்த வலைத்தளத்தைப் பற்றிச் சுற்றுச்சூழல் பயங்கரவாதிகளோ ஊடக அரைகுறைகளோ மூச்சுக் கூடவிடவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
நிறுவனம் தெளிவாக எந்தத் திரவக் கழிவுகளும் வெளிச் செல்வதில்லை என்று சொல்கிறது. மத்திய அரசும் பல விதிமுறைகளைத் தெளிவாக விதித்திருக்கிறது. இவற்றைப் பற்றியும் அறிக்கையில் எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. எனவே சுற்றுச்சூழல் பயங்கரவாதிகளுக்கு நடந்து கொண்டிருக்கும் ஆலையின் மீது குற்றம் சொல்ல அனேகமாக ஒன்றுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இதனால்தான் அறிக்கை ஆலையை அடைக்கச் சொல்லி வலியுறுத்தவில்லை.
3. அறிக்கை வேறு என்ன சொல்கிறது?
விரிவாக்கம் தடுக்கப்படவேண்டும் என்று கூறுகிறது. மீண்டும் சொல்கிறேன். செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கை அறிக்கையில் இல்லை. விரிவாக்கம் மட்டும் தடை செய்யப்பட வேண்டும் என்பதுதான் கோரிக்கை
4. ஏன் அந்தக் கோரிக்கை?
கோரிக்கைக்கும் மாசுக்கட்டுப்பாட்டிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நிறுவனத்திற்கு 1.1. 2009; அளித்த மத்திய அரசின் விரிவாக்க அனுமதி எல்லாம் விதிமுறைகளை மீறிக் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். எனவே கொடுத்த எல்லோரையும் மீறி அனுமதி கொடுத்ததற்காக குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டுமாம்.
5. யாரெல்லாம் இவர்கள் கூற்றின்படிக் குற்றவாளிகள்?
மாவட்ட்ட ஆட்சியர், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம். இவர்கள் எல்லோரும் சேர்ந்து பொய் சொல்லுகிறார்களாம்.
6. அறிக்கை இன்னும் என்ன சொல்கிறது?
நிறுவனத்தினர் 1.1. 2009 அன்று மத்திய அமைச்சகத்தினால் கொடுக்கப்பட்ட அனுமதியை 31.12.2018க்குப் பிறகு நீட்டிக்கக் கோரியிருக்கிறார்களாம். இவர்களுக்கு இப்போது இருக்கும் அனுமதியின் மீது ஐயமோ, குற்றச்சாட்டுகளோ இருந்தால் என்ன செய்ய வேண்டும்? இவர்கள் நிறுவனத்தின் மீதும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மீதும் வைக்கும் குற்றச்சாட்டுகளின் பட்டியலை அனுப்பி அனுமதியை நீட்டிக்கக் கூடாது என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லியிருக்கிறோம் என்று மக்களிடம் அறிவிக்க வேண்டும். இது மக்களுக்குத் தெரிந்தால் அவர்கள் போராட்டத்தை நீடிப்பார்களா என்ன? இவர்கள் பட்டியலிடும் குற்றச்சாட்டுக்களில் எந்த வலுவும் இல்லை என்பது இவர்களுக்கே தெரியும். அதை மத்திய அரசு உடனே நிராகரித்து விடும் என்பதும் இவர்களுக்குத் தெரியும். எனவேதான் இவர்கள் மத்திய அரசை அணுகுவதற்குப் பதிலாக ஊடகங்களை அணுகியிருக்கிறார்கள்
உயர்நீதி மன்றத்திற்குப் பொய்யான தகவல்களை அரசு அதிகாரிகளும், நிறுவனத்தினரும் கூறியிருக்கிறார்கள் என்று அறிக்கை சொல்கிறது. பொய்யான தகவல்களைச் சொல்லியிருந்தால் இவர்கள் அணுக வேண்டியது உயர்நீதி மன்றம். அதை ஏன் செய்யவில்லை என்பது தெரியவில்லை.
7. அறிக்கை உருப்படியாக ஏதாவது சொல்லியிருக்கிறதா?
நிச்சயமாக ஒன்றைச் சொல்லியிருக்கிறது.
தூத்துக்குடிப் பகுதியில் இருக்கும் ஆலைகளால் ஏற்படும் காற்று,நீர் மற்றும் நிலத்தின் ஏற்படும் சீரழிவுகளையும் குறித்து தெளிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருக்கிறது. எந்தத் தொழில் விரிவாக்கமும் அது சீரழிவை ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்த பிறகுதான் தொடங்கப்பட வேண்டும் என்கிறது. நான் இந்தக் கோரிக்கையை முழுமையாக ஆமோதிக்கிறேன். பெரிய நிறுவனங்கள் மட்டும் அன்று சிறுதொழில் மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் உருவாக்கும் மாசுக்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட வேண்டும். மக்களிடமிருந்து எதையும் மறைக்கக் கூடாது.
முடிவாக,
1. ஸ்டெர்லைட் நிறுவனம் மாசு ஏற்படுத்துகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சுற்றுச்சூழல் பயங்கரவாதிகளாலேயே கொடுக்க முடியவில்லை.
2. விரிவாக்கத்திற்குக் கொடுத்திருக்கும் அனுமதி அரசு விதிகளை மீறிக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் அணுக வேண்டியது மத்திய அரசை. ஊடகங்களை அல்ல. அணுகியிருக்கிறோம் என்று ஊடகங்களிடமும் மக்களிடமும் அறிவிக்க வேண்டும்.
3. ஒரு நிறுவனத்தை மட்டும் குறி வைத்துத் தாக்குவது, அதுவும் ஆதாரங்கள் ஏதும் இல்லாத போது தாக்குவது போன்ற செயல்கள் யார் தூண்டுதலில் இவர்கள் செயல்படுகிறார்கள் என்ற சந்தேகத்தை வரவழைக்கிறது. சீரழிவு ஒரு நிறுவனத்தால் மட்டும் ஏற்படவில்லை என்பது தெளிவு.
4. எல்லாத் தொழில் நிறுவனங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வரவேற்கத்தக்கது. ஸ்டெர்லைட் நிறுவனம் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டாலும் உற்பத்தியைத் துவங்குவது இந்த ஆய்வைப் பொறுத்து இருக்கிறது என்பதை அவர்களிடம் தெளிவாக்குவதிலும் எந்தப் பிரச்சினையும் இருக்க முடியாது.
5. அரசியல்வாதிகளுக்கும் ஊடகத்தினருக்கு மாசுக்கட்டுப்பாட்டைப் பற்றி எந்தத் தெளிவும் இல்லை என்பது வெளிப்படை. மக்களுக்கு விளக்க வேண்டியது அவர்கள் கடமை. அதில் அவர்கள் முழுவதுமாகத் தவறி விட்டார்கள்.