இன்று ராம நவமி.
ராமனைப் பற்றித் திராவிடக் கழிசடைகள் பத்தி பத்தியாக எழுதுகிறார்கள். சம்புகன் வதத்தைக் குறிப்பிட்டு எழுதுகிறார்கள். ராம ராஜ்யம் என்றால் சம்புகன் வதம் என்று ஒற்றைப்படையாகக் கூறுவது, திராவிட ஆட்சி என்றால் மனைவி, துணை, கூத்தியாருடன் கும்மாளம் அடிப்பதுதான் என்று சொல்வதற்கும், பெரியார் என்றால் எழுபது வயது மனிதன் நேற்றுவரை மகளாக கருதப் பட்ட பெண்ணை மனைவியாகக் கருதுவதுதான் என்று சொல்வதற்குச் சமம். ராம ராஜ்யம் என்றால் வருணாசிரம ஆட்சிதானாம். எனக்கு ராம ராஜ்யம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. ஆனால் ராம ராஜ்யம் திராவிடத் திருடர்களின் ஆட்சியை விட நன்றாக இருக்கும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது. ராம ராஜ்யம் என்றால் காந்தி உண்மையின் ராஜ்யம் கடையவனையும் காப்பாற்றும் ராஜ்யம் என்று நம்பினார். தர்மத்தின் ராஜ்யம் என்று நம்பினார். திராவிட மூடர்கள் சொல்வது போல மனுதர்மத்தின் ராஜ்யம் அல்ல. மனிதனை மதிக்கும் தர்மம். பெரியார் மக்களாட்சியை எதிர்த்து அவருக்கே உரித்தான சாக்கடை மொழியில் பேசிக் கொண்டிருந்த போது, காந்தி எல்லோருக்கும் ஓட்டுரிமை வேண்டும் என்பதை வலியுறுத்திக் கொண்டிருந்தார்.
ராமனைக் கடவுளாக வழிபடுபவர்கள் அவனை சம்புகனை வதம் செய்தவனாகப் பார்க்கவில்லை. மனிதர்களின் சிறந்தவனாக, இறைவனின் அம்சமாக, பிறன் மனை நோக்காப் பேராண்மை கொண்டவனாகப் பார்க்கிறார்கள்.
இனி ராமயணத்திற்கு வருவோம்.
உத்தர ராமாயணம் வால்மீகி எழுதியது அல்ல, பின்னால் சேர்க்கப்பட்டது என்று நம்புகிறார்கள்.
வான்மீகி ராம ராஜ்யம் பத்தாயிரம் ஆண்டுகள் நடந்தது என்கிறார். அகால மரணம் இல்லவே இல்லை என்கிறார். சம்புகன் வதத்திற்குக் காரணம் சிறுவன் ஒருவனின் அகால மரணம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
உத்தர காண்டம் இடைச் செருகல் என்றாலும், அதை செருகியவர்கள் ராமனை வருணதர்மத்தை உயர்த்திப் பிடிப்பவனாக காட்டியிருக்கிறார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதை வைத்துக் கொண்டு ராமனை எடை போட முடியுமா?
இஸ்லாமில் நபிகள் நாயகம் அடிமைத்தனத்தை ஆதரித்தவராகச் சொல்வதில்லையா? ஆனால் அவரே அடிமைகளை மனிதர்களாக நடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். நபிகள் வரலாற்றில் அவர் பானு குரய்சாவில் சரணடைந்த யூத மக்களை ஈவு இரக்கமின்றி கொலை செய்யச் சொன்னதாக வரலாறு சொல்கிறது. யூதப் பெண்களும் குழந்தைகளும் அடிமையாக்கப்பட்டார்கள் அல்லது இஸ்லாமிற்கு மாற்றப்பட்டார்கள். இதனால் நபிகளை இறைத்தூதர் என்று இஸ்லாமியர் நம்புவது தவறு என்று சொல்ல முடியுமா?
திராவிடத் தற்குறிகளுக்கு உத்தர ராம சரிதம் என்ற வடமொழி நூல் இருக்கிறது, பவபூதியால் எழுதப்பட்டது என்ற செய்தி தெரிந்திருக்க நியாயமில்லை.
உத்தர ராம சரிதத்தில் ராமன் தனது வலது கையை நோக்கிச் சொல்கிறான். “நீ இரக்கம் காட்டாதே. நீ வயிற்றில் குழந்தையைக் கொண்டிருந்தவளைக் காட்டிற்கு அனுப்பியவளின் உடம்பின் ஓர் அங்கம்.”
பின்னால் சம்புகனின் தவத்தின் பலன் அவனுக்குக் கிடைக்கும் என்று ராமன் வாழ்த்தும் போது சம்புகன் எனக்கு கிடைத்திருக்கும் உயர்ச்சி (அவன் சுவர்க்கத்தை அடைகிறான்) உன் காலடியில் வீழ்ந்ததால்தான், எனது தவ வலிமையால் அல்ல என்று தெளிவாகக் கூறுகிறான். நான் அகத்தியருக்கு எனது வணக்கங்களைச் செலுத்தி விட்டு இறையுலகை அடைகிறேன் என்றும் அவன் கூறுகிறான்.
தமிழக மக்களைப் பொறுத்த வரை அவர்களில் பலருக்கு உத்தர ராமாயணம் என்று ஒன்று இருக்கிறது என்பதே தெரியாது. அவர்களுக்குத் தெரிந்தது கம்ப ராமாயணம். கம்பனின் இராமன் கூறும் அறம் என்ன?
வீபிஷணனைச் சேர்த்துக் கொள்ளவா வேண்டாமா என்ற விவாதம் நடக்கும் போது ராமன் தெளிவாகச் சொல்கிறான்:
“இடைந்தவர்க் கபயம் யாமென் றிரந்தவர்க் கெறிநீர் வேலை
கடைந்தவர்க் காகி ஆலம் உண்டவர்க் கண்டி லீரோ
உடைந்தவர்க் குதவா னாயின் உள்ளதொன் றீயா னாயின்
அடைந்தவர்க் கருளா னாயின் அறமென்னாம் ஆண்மை என்னாம்’’
இது ராமன் காட்டும் அறம். உடைந்தவர்களுக்கு உதவுவது . இருப்பதை மற்றவர்களுக்குக் கொடுப்பது. தன்னிடம் அடைக்கலம் புகுந்தவர்களுக்கு அருளுவது.
பின்னால் அவன் சடாயுவை என் தந்தை என்று அழைக்கும் தருணமும் வருகிறது:
“சரண் எனக்கு யார்கொல்? என்று சானகி
அழுது சாம்ப,
“அரண் உனக்கு ஆவென்; வஞ்சி! அஞ்சல்!” என்று
அருளின் எய்தி,
முரணுடைக் கொடியோன் கொல்ல,மொய்அமர்
முடித்து, தெய்வ
மரணம் என் தாதை பெற்றது என்வயின் வழக்கு
அன்று ஆமோ?”
இராவணனை எதிர்த்து நான் மரணமடைந்தாலும் என்னிடம் சரண் என்று அடைந்தவரைக் காப்பேன் என்கிறான் ராமன். அந்த முறைமை என் தந்தையிடம் இருந்து பெற்றது, பறவைத் தந்தையிடமிருந்து பெற்றது என்கிறான்.
இந்த ராமன்தான் தமிழர்களின் ராமன். பெரியாரியக் கழிசடைகள் ராமன் என்று அடையாளப்படுத்துவது அவர்கள் மனதின் இருக்கும் அழுக்குகளின் வடிவம். அதற்கும் தமிழர்களின் ராமனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
மகாத்மா காந்தியைக் கொன்ற கொலைக்கார கூட்டமல்லவா இராமராஜ்யத்தை கொண்டு வரத்துடிக்கிறது! அந்த இராமராஜியம் எப்படி நன்றாக இருக்க முடியும்?
பா.ஜா.க. ஆளும் மாநிலங்களை விட திராவிடக் கட்சிகள் ஆளும் தமிழ்நாடு பொருளாதாரம் முதற்கொண்டு கல்வி வரை, சுகாதாரம் முதற்க்கொண்டு சட்ட ஒழுங்கு வரை முன்னிலையில் இருக்கிறது.
LikeLike